×

சென்னையில் போக்குவரத்து விதி மீறிய 2500 பேர் மீது போலீஸ் வழக்கு: புதிய சட்டத்தின்படி அபராதம் விதித்தனர்

சென்னை: புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கூடுதல் அபராதத் தொகையுடன் இன்று காலையில் இருந்து 2500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டது. பழைய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

அதனடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமின்றி சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் போக்குவரத்து விதிமுறையை மீறுபவர்கள் மீது அபராதங்கள் வசூலிக்க அதிகாரம் இந்த சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கும் அதிகாரம் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு ேமல் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், போக்குவரத்து துறையின் சோதனை சாவடிகளுக்கு இந்த அதிகாரத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத கட்டணங்கள் வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19ம் தேதி வெளியிட்டது. அந்த அரசாணைப்படி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் முதல் முறை செய்யும் சாலை விதிமீறலுக்கு ஒரு அபராதம் கட்டணம், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் அதற்கு கூடுதலான ஒரு அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றால் திருத்தப்பட்ட ேமாட்டார் வாகன சட்டத்தின் படி ரூ-1000 அபராதமும், அதே விதிமீறலில் இரண்டாவது முறை ஈடுபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும். சிக்னலை மதிக்காமல் செல்வோருக்கு முதல் முறை ரூ.500ம் இரண்டாவது முறை  ரூ.1500ம் அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.5 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும்.

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோருக்கு முதல் முறை ரூ.500ம் இரண்டாவது முறை ரூ.1500ம் அபராதம் வசூலிக்கப்படும். அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.அதுமட்டும் இல்லாமல் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், 18 வயதுக்கு கீழே  உள்ளவர்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு சாலை விதிமீறலுக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது முறை செய்யும் நபருக்கு ஏற்ப அபராத தொகையானது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை மற்றும் விதி மீறல்கள் குறித்து கணினி மற்றும் இ-செலான் கருவியில் பதிவேற்றம் செய்வது நாளை  (28ம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று உயர் காவல்துறை அதிகாரிகள் சார்பில் முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட் அபராத தொகையினை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கணினி சேவையகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதால், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத தொகை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நேற்று முதல் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து சிக்னல்கள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளிடம் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் முக்கிய அபராத கட்டணங்களை பதாகைகளில் எழுதியும் மற்றும் துண்டு அறிக்கைகள் விநியோகம் செய்தம் விழிப்புணர்வு செய்தனர்.

அதன்படி சென்னையில் அண்ணாசாலை, காமராஜர்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி சாலை, வடபழனி 100 அடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் என 150 இடங்களில் நேற்று போலீசார் புதிய வாகன சட்டத்தின் படி விழிப்புணர்வு செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி உள்ளிட்ட சில இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதித்து அதை வாகன ஓட்டிகளிடம் வசூலித்தனர்.

அப்போது, மெரினா காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை என பல இடங்களில் விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் அதிகமாக இருப்பதாக போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் புதிய மோட்டார் வாகன சட்டப்படி தான் இந்த கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அதற்கான அரசாணை வாகன ஓட்டிகளிடம் காட்டி வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தனர்.

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்திய முதல் நாள் என்பதால், நேற்று சென்னையில் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி பெரும்பாலான இடங்களில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்று காலை முதல் சென்னை நகர் முழுவதும் போலீசார் புதிய சட்டத்தின்படி அபராதம் விதித்தனர். அதன்படி 2500 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புதிய அபராதம் விதிக்கப்பட்டது. மாலையில் இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் புதிய சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chennai , Police case against 2500 people for violating traffic rules in Chennai, collecting fine as per new law
× RELATED கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை...