×

உள்ளிருந்து தாக்கும் சையாட்டிகா... வெளியிருந்து காக்கும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

நாற்பது வயது கடந்த தனகோபால் என்பவர் பதினைந்து வருடங்களாக கார் ஓட்டுனராக இருப்பவர். அவருக்கு பின்னங்கால் முழுக்க வலி எடுக்கிறது, சிலநேரம் கால் மறுத்துப்போகிறது. இது இல்லாமல் முதுகு வலியும் இருக்கிறது. அவருக்கு இருக்கும் பிரச்னைகள் அவருக்கான தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. நம்மில் பலர் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பர். சிலர் இப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பர்.

ஏன் வலி ஏற்படுகிறது?

முதுகில் லேசான வலி ஆரம்பித்து ஒருபக்கமாக பின்னங்கால் முழுக்கப் பரவி, கண்டங்கால் வரை வலி கீழ் இறங்கும். இவ்வாறு வலி உருவாவதை மருத்துவத்தில் ‘சையாட்டிகா’ என்று அழைப்பர். சிலநேரம் கால் குடைதல், எரிச்சல் உணர்வு, கால் மறுத்துப் போவது போன்றவையும் ஏற்படும். இடுப்பில் இருந்துவரும் நரம்புக்கொத்தில் சையாட்டிகா என்னும் நரம்பு பின்புற புட்டம் வழியாக கண்டங்கால் வரை செல்லும். இந்த நரம்பு வரும் பாதையில் ஏதேனும் நரம்புக்கு அழுத்தம் ஏற்பட்டால் இவ்வாறான வலி ஏற்படுவதை இதற்கான காரணமாக சொல்லலாம்.

காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

*முதுகுத்தண்டுவடத்தில் உள்ள ஜவ்வு போன்றிருக்கும் தட்டுகள் வெளியே பிதுங்கி முதுகுத்தண்டில் இருந்து வெளிவரும் சையாட்டிகா நரம்பினை அழுத்துவதால் இப்பிரச்னை வரக்கூடும்.

*இடுப்பில் உள்ள தசைகள் இறுக்கமாக இருந்தால் புட்டம் வழியாக வரும் சையாட்டிகா நரம்பு அழுந்தப்பட்டு வலி வரக்கூடும்.

*இவை இரண்டுதான் பெரும்பாலும் பாதிப்புக்கான காரணங்கள் என்றாலும், இவற்றோடு சேர்த்து அரிதாக முதுகுத்தண்டில் புற்றுநோய் கட்டி வந்து நரம்பை அழுத்துவதாலும், நெடுநாள் சர்க்கரை வியாதி மற்ற நரம்புகளை பாதிப்பது போல் இந்த சையாட்டிகா நரம்பையும் பாதிப்பதாலும், காசநோய் சிலருக்கு முதுகுத்தண்டில் ஏற்பட்டு இடுப்பில் உள்ள தசைகளை பாதித்து நரம்பினை அழுத்துவதாலும், உடல்பருமன் உள்ளவர்களுக்கு நேரடியாக நரம்பு அழுத்தப்படுவதாலும் வரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன அறிகுறிகள் இருக்கும்?

*இடுப்பில் லேசான வலி ஆரம்பித்து ஒருபக்கமாக பின்னங்கால் முழுக்கப் பரவி, கண்டங்கால் வரை வலி கீழ் இறங்கும்.

*சிலநேரங்களில் கால் மறுத்துப்போவது, குடையும் உணர்வும் எரிச்சலும் ஏற்படுவது.

*இவ்வலி ஒருகாலில் மட்டுமே 99 சதவிகிதம் வரக்கூடும்.

*இருமினாலோ, தும்பினாலோ, அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலோ இப்பிரச்னை உள்ளவர்களுக்கு வலி இன்னும் அதிகமாகும்.

*நரம்பு முதுகுத்தண்டுவடத்தில் அதிகமாக அழுத்தப்பட்டால் தசைகள் தளர்ச்சி அடைவதும், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் கட்டுப்பாடின்றி இருப்பதும் நிகழும்.

*நடப்பதில் சிரமம், இரவில் நடுநடுவில் வலி ஏற்படுவதால் தூக்கம் பாதிப்பது, தினசரி வேலைகளை சரிவர செய்ய முடியாமல் போவது போன்றவை நேரிடும்.

எவ்வாறு கண்டறிவது?

மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனே அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகவும். அவர் சில தசை பரிசோதனைகளை செய்து, இப்பிரச்னையை உறுதி செய்வார். தேவை இருந்தால் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றை பரிந்துரை செய்வார்.தேவையான சிகிச்சை...

95% இப்பிரச்னையை இயன்முறை மருத்துவத்திலேயே சரிசெய்துவிடலாம் (மீதமுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்). இயன்முறை மருத்துவத்தில் வலி குறைவதற்கு சில இயன்முறை மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தியும், பின் தேவையான பயிற்சிகள் வழங்கியும் சரி செய்வர். இதனால், நரம்பு அழுத்தப்படுவதை தவிர்க்க முடியும்.

வராமல் தப்பிக்க...

*நீண்டநேரம் அமர்ந்தபடி வேலை செய்பவர்கள் இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருதடவை சில எளிய பயிற்சிகள் செய்யவேண்டும்.

*உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

*தினசரி உடற்பயிற்சி செய்யவேண்டும்.

எந்தவொரு வலியும் தானாக வருவதில்லை என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ப நம்மையும், நம் வாழ்க்கைச் சூழலையும் வடிவமைத்துக்கொண்டாலே போதும் பெரும்பான்மையான வலிகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம். அவ்வகையில் இந்த சையாட்டிக் நரம்பு விஷயத்தில் போதிய அறிதலும் புரிதலும் இருந்தால் போதும் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags :
× RELATED 40+ பெண்ணா? சியாட்டிகா ஜாக்கிரதை!