திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றின் கரையில் அஸ்தி கரைக்கும் இடத்தில் குளியலறை, கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் பக்தர்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.திருப்புவனம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள புஸ்பவனேஸ்வரர் சவுந்திர நாயகி அம்பாள் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ளது. இங்குள்ளவைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தி கரைப்பதும், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகின்றனர்.
ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்ய வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் குளித்து திதி- தர்ப்பணம் கொடுத்தும், அஸ்தி கரைத்து செல்வதும் வழக்கம்.தண்ணீர் இல்லாத காலங்களில் ஒரே ஒரு குளியலறை, கழிவறை மட்டுமே பேரூராட்சி மூலம் இலவசமாக செயல்பட்டு வருகிறது. ஆற்றுக்கரையோரம் ஒரு தொட்டி மட்டும் தனியார் ஒருவர் கட்டி கொடுத்துள்ளார்.
அந்த குளியல் தொட்டிக்கு பேரூராட்சி இலவச குளியல் அறையிலிருந்து தண்ணீர் வருகிறது. இதில் ஆண், பெண் என இருபாலரும் குளித்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு போதுமான குளியல் அறைகளோ, கழிப்பறைகளோ கிடையாது. பெண்களுக்கு தனி குளியல் அறையோ, உடைமாற்றும் அறையோ கிடையாது. இங்கு வெளியூரிலிருந்து வரும்
பக்தர்கள் கார், வேன், டூவீலர் என நூற்றுக்கணக்கான வாகனங்களில் தினசரி வருகின்றனர். அந்த வாகனங்களை நிறுத்த முறையான பார்க்கிங் ஏரியா இல்லை. மேலரத வீதி சாலையில் தான் அத்தனை வாகனங்களும் பார்க்கிங் செய்யப்படுகிறது.
மேலும் சாலையின் இருபக்கமும் சிறுகடைகள் உள்ளன. இதனால் எந்நேரமும் இச்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மேலும் ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் வேட்டி, சேலைகளை ஆற்றில் போடுவதாலும், பூஜை பொருட்களின் கழிவுகளாலும் வைகை ஆறு மாசு பட்டு வருகிறது. சிவகங்கை தேவஸ்தானம் தான் திதி, தர்ப்பணம் செய்ய வருபவர்களிடம் தட்டுக்கு ரூ.70 ம், தர்ப்பணத்திற்கு ரூ.30ம் வாகனத்திற்கு ரூ.20ம் வசூல் செய்கின்றனர்.
முன்னோர்களை சாந்தப்படுத்தி பித்ரு தோஷம் போக்கும் புண்ணிய தலத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிவகங்கை தேவஸ்தானம் திருப்புவனத்தில் தர்ப்பணம் கொடுக்கும் இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புவனத்தில் ஏன் திதி, தர்ப்பணம் செய்ய வேண்டும்?
முன்னொரு காலத்தில் ஒரு மன்னன் தன் தாயின் அஸ்தியை காசியில் கரைத்து விட்டு ராமேஸ்வரத்தில் கரைப்பதற்காக திருப்புவனம் வழியாக சென்ற போது இருட்டி விட்டதால் இங்கேயே தங்கி விட்டார். அதுசமயம் மன்னரின் உதவியாளர் அஸ்தி கலசத்தை திறந்துள்ளார். கலசத்தில் அஸ்திக்கு பதில் பூக்களால் நிரம்பியிருந்துள்ளது. உதவியாளர் அப்படியே கலசத்தை துணியால் கட்டி வைத்து விட்டு தூங்கி விட்டார். மறுநாள் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டனர்.
அங்கு சென்று அஸ்தி கலசத்தை அவிழ்த்த போது அஸ்தி சாம்பல் இருந்துள்ளது. உடனே உதவியாளர் மன்னரிடம் திருப்புவனத்தில் இந்த கலசத்தை அவிழ்த்து பார்த்த போது பூக்கள் இருந்த விபரத்தை கூறியுள்ளர். உடனே மன்னரும் திருப்புவனம் திரும்பினார். அவரும் அஸ்தி கலசத்தை அவிழ்த்த போது கலசம் பூக்களால் நிரம்பியிருந்தது. அஸ்தி சாம்பாலையே பூக்களாக மாற்றும் அதிசயம் நிகழ்ந்ததை கண்டு அஸ்தியை இங்கு கரைத்தால் முன்னோர் மோட்சம் பெறுவார்கள் என்று நம்பி வைகை ஆற்றில் கரைத்து புஸ்பவனேஸ்வர சுவாமியையும், சவுந்த நாயகி அம்பாளையும் வழிபட்டு சென்றதாகவும், அதனை தொடர்ந்து திருப்புவனத்தின் புகழ் பரவியாதாக கூற்ப்படுகிறது.
