×

நெம்மேலி - திருப்போரூர் சாலை சீரமைப்பு

திருப்போரூர்: பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் மற்றும் நெம்மேலி இடையே சுமார் 3 கி.மீ. தூர சாலை உள்ளது. இந்த சாலையை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராம மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். திருப்போரூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம், மின் வாரிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல மிகவும் உபயோகமானதாக இந்த சாலை உள்ளது. நெம்மேலியில் உள்ள தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, ஓ.எம்.ஆர். சாலையின் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இந்த பணிக்காக ராட்சத லாரிகளில் ஏரி மண் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு ராட்சத லாரிகள் செல்வதால் சிறிய அளவிலான இந்த சாலையானது பாரம் தாங்காமல் பல இடங்களில் சேதமடைந்து விட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த ஜூலை 30ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஆய்வாளர் முகம்மது காதர் சேதமடைந்த சாலையை பார்வையிட்டார். இதை தொடர்ந்து நேற்று சாலையின் சேதமடைந்த பகுதிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. சாலையில் இருந்த பள்ளம் தார் மற்றும் ஜல்லி கலவை கொண்டு நிரப்பப்பட்டது.


Tags : Nemmeli , Nemmeli - Tiruporur road rehabilitation
× RELATED கனரக வாகனங்கள் செல்வதால் சேதமடைந்த...