×

நமது மாநிலத்தில் உள்ளவர்கள் மிகவும் திறமையானவர்கள் தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அரசு செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த அரசு நிச்சயமாக செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ராணி மேரி கல்லூரியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை சார்பில் மாநில அளவிலான முதல் ‘இளைஞர் திறன் திருவிழா’வை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த சிறப்பான விழா, பாரம்பரியமிக்க ராணி மேரி கல்லூரியில் நடைபெறுவது மிகமிக பொருத்தமான ஒன்று. ராணி மேரி கல்லூரிக்குள் நுழையும்போது பழைய நினைவுகள் வந்தது. பழம்பெரும் பெரிய வரலாற்றை கொண்டிருக்கும் கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முனைந்தார். இதை இடிக்கக்கூடாது என்று அன்றைக்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்தினார்கள்.

 இதற்கு ஆதரவு தெரிவிக்க நான் இந்த கல்லூரிக்கு வந்தேன். வந்தவுடன், நுழைவாயிலில் இருந்த போலீஸ் காவலர்கள் ரொம்ப மரியாதையுடன் கதவை திறந்து உள்ளே விட்டார்கள். கல்லூரிக்குள் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்தித்து 2, 3 நிமிடம் பேசிவிட்டு போனேன். வெளியில் போகும்போது காவலர்கள் கதவை திறந்துவிட்டார்கள், சென்றேன். இதுதான் நடந்தது. அப்போது மதியம் 2 அல்லது 3 மணி இருக்கும். அன்று இரவு 9 மணிக்கு எனது வீட்டுக்கு போலீஸ் வந்தது. உங்களை கைது செய்கிறோம் என்றார்கள். என்ன காரணம் என்று கேட்டேன். ராணி மேரி கல்லூரிக்கு சென்று பூட்டியிருந்த கேட் மீது ஏறி குதித்து உள்ளே சென்று மாணவிகளை போராட தூண்டிவிட்டு வந்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால் கைது செய்ய வந்துள்ளோம் என்றனர். கடலூர் சிறையில் ஒரு மாதம் இருந்தேன். அது எனக்கு ஒரு பெரிய பெருமை.

இத்தகைய புகழ்மிக்க ராணி மேரி கல்லூரியில், ரூ.3.2 கோடியில் கலைஞர் மாளிகை என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள், கலைஞர் என்ற பெயரை நீக்கி விட்டார்கள். மீண்டும் இப்போது நாம் சூட்டியிருக்கிறோம். கட்டிடத்தில் உள்ள பெயரை நீக்கினாலும், மக்கள் மனதில் இருந்து கலைஞர் பெயரை நீக்க முடியாது. இளைஞர் திறன் திருவிழா, இளைஞர் என்றால் மாணவர் என்று பொருள் அல்ல, மாணவிகளும் அதில் அடக்கம். இளைஞர்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் வளர்ச்சியை பொருத்தே நாட்டின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது.

மற்ற நாடுகளோடு நாம் ஒப்பிட்டு பார்க்கும்போது 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டு இருக்கும் இளைஞர்கள் அதிகமாக இருக்கும் நாடு நம்முடைய இந்தியாதான். அந்த இளைஞர்களை அனைத்து வகையிலும் திறமைசாலிகளாக நாம் உருவாக்க வேண்டும். இளைஞர்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கு முக்கியமாக, கல்வியை நாம் தந்தாக வேண்டும். இன்றைய தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள், இத்தகைய உழைப்பு சக்கரத்தை உருவாக்கும் திட்டங்களாக அமைந்திருக்கும். அதற்கேற்ப நமது இளைஞர்களை தயார்படுத்திட கடமை உணர்ச்சியோடு தொடங்கப்பட்ட கனவு திட்டம்தான் நான் முதல்வன் என்ற திட்டம். அதேபோல் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒவ்வொருவிதமான விருப்பம் இருக்கும். அந்த விருப்பங்களை வளர்த்தெடுக்கவும் இத்திட்டம் அடிப்படையாக அமைந்திருக்கிறது.

நம்முடைய மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த அரசு நிச்சயமாக செயல்படும். உலகதிறன் போட்டிகளில் பங்குபெறும் விதமாக மாநிலத்தில் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற 32 மாணவர்கள், ஜனவரியில் டெல்லியில் நடந்த இந்திய அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 23 பேர் பதக்கங்களை பெற்றிருக்கிறார்கள். இதுபோல் அதிக பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும். இது இந்த அரசு, திறன் மேம்பாட்டுக்கு செலுத்திய அக்கறைக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

இந்த இளைஞர் திறன் விழா தமிழகத்தில் உள்ள 388 வட்டாரங்களிலும் ரூ.1.94 கோடி செலவில் நடத்தப்படும். 2006ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 785 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டங்கள் மூலமாக தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு 1 லட்சத்து 17 ஆயிரத்து 841 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடந்த நிதி ஆண்டில் 79 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு நடைபெற்று வரும் இளைஞர் திறன் திருவிழா இளைஞர்களின் வாழ்விற்கு மேலும் வளம் சேர்க்கக்கூடிய நோக்கத்தில் இருக்கிறது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விழா இளைஞர்களின் வாழ்வில் மேலும் வளம் சேர்க்கும். இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை நம்பியே இருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் நான் முதல்வன் திட்டத்தை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டின் முதன்மை மாநிலமாக ஆக்க இந்த அரசு உறுதி கொண்டிருக்கிறது. தமிழக இளைஞர்கள் அனைவரும், ‘நான் முதல்வன்’ என்ற நம்மிக்கையோடு வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா, தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டு துறை செயலாளர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பல்லவி பல்தேவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் பிரியங்கா, ராணி மேரி கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.25.66 கோடி வங்கி கடன்
முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டதுடன், இளைஞர் திறன் திருவிழா கலந்தாய்வு கூடங்களையும் பார்வையிட்டு, இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். மேலும், 608 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, காய்கறி, பழ வியாபாரம், மளிகைக்கடை, சிறு பெட்டிக்கடை, தையல் நிலையம் போன்ற தொழில்கள் நடத்துவதற்கு 25.66 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை முதல்வர் வழங்கினார். ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை கண்காட்சி 25ம் தேதி (நேற்று) முதல் வருகிற 29ம் தேதி வரை நடைபெறும்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , The people in our state are very talented. The government will act as a guide for the youth of Tamil Nadu: Chief Minister MK Stalin's commitment
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...