தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 70 வார்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 54 இடங்களில் வெற்றி பெற்றன. வெற்றிபெற்ற 70 மாமன்ற உறுப்பினர்களும் கடந்த 2ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். மாநகராட்சியின் முதல் மேயர் பதவி, பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் துணை மேயராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோரை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது.
தொடர்ந்து, மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள 25 வயதான பி.டெக் கெமிக்கல் பொறியாளர் பட்டதாரியான வசந்தகுமாரி கமலகண்ணன் தனது வீட்டில் அவரது பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு சாலையில் நடந்து வந்தபடி பொதுமக்களிடம் வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டார். பின்னர், தனது தந்தை கமலக்கண்ணன் உடன் இருசக்கர வாகனத்தில் எளிமையாக தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தாம்பரம், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.எம்.இளங்கோவன் முன்னிலையில் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல், குரோம்பேட்டை பகுதியில் இருந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் துணை மேயர் வேட்பாளர் கோ.காமராஜ் எளிமையாக வந்தார். அவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவி ஏற்ற பிறகு மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பேசுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்விளக்கு அனைத்தும் நிச்சயமாக செய்து தரப்படும். தாம்பரம் மாநகராட்சி சென்னைக்கு நிகரான மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்,’’ என்றார்.
