×

வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி சென்னை தலைமை செயலக ஊழியர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த தலைமை செயலக ஊழியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வில்லிவாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜமுருகன் பாபு (45), தனியார் கம்பெனி ஊழியர். இவர், நேற்று முன்தினம் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை தலைமை செயலகத்தில் வருவாய் துறை பிரிவில் பணிபுரியும் கோமதி என்பவர் மூலம், நிதித்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் சேத்துப்பட்டு மங்கலாபுரத்தை சேர்ந்த நிக்சன் (53) என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர், எனக்கு அமைச்சர்கள் அனைவரும் தெரியும். உங்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருகிறேன், என ஆசை வார்த்தை கூறினார். மேலும், அதற்காக பணம் கொடுக்க வேண்டும், என தெரிவித்தார். அவரை நம்பி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ரூ.14 லட்சத்து 5 ஆயிரம் கொடுத்தேன். ஆனால், அவர் சொன்னபடி வேலை வாங்கி தராமல் அலைக்கழித்து வந்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, வேலை வாங்கித்தர முடியாது. உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. மீறி தொந்தரவு செய்தால், கொன்று விடுவேன், என மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி நிக்சன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நிக்சனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் கோமதியை தேடி வருகின்றனர்.

Tags : Chennai General Secretariat , Chennai General Secretariat employee arrested for swindling Rs 14 lakh
× RELATED சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஆலோசனை