×

2வது ஆண்டாக ஆற்றுத்திருவிழாவுக்கு தடை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்கள் ஏமாற்றம்

* வெறிச்சோடிய தென்பெண்ணையாறு
* தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் : ஆற்றுத்திருவிழாவுக்கு தடை விதித்ததால் தென்பெண்ணையாறு வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை ஒரு வாரம் கொண்டாடப்படும். போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலையடுத்து, ஆற்றுத்திருவிழா கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரை தென்பெண்ணையாற்றில் விழுப்புரம் அருகே பேரங்கியூர், பிடாகம், கோலியனூர் அருகே சின்னக்கல்லிப்பட்டு, கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பம், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை ஆகிய பிரசித்தி பெற்ற இடங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் மணலூர்பேட்டை கோமுகி அணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஆற்றுத்திருவிழாவிலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்பர்.

இதேபோல, கண்டமங்கலம் அருகே கொடுக்கூர், மேட்டுப்பாளையம், விக்கிரவாண்டி அருகே கயத்தூர், திண்டிவனம் அருகே ஓங்கூர், மரக்காணம் கடற்கரை உள்ளிட்ட 25 இடங்களில் உள்ள ஆறுகளில் ஆற்றுத்திருவிழா நடைபெறும். இந்த ஆற்று திருவிழாவில் விவசாயிகள் விளைவித்த சிறுவள்ளி கிழங்கு, தானியங்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பேன்சி மற்றும் விளையாட்டு பொருட்கள், சிறுவர்களுக்கான ராட்டிணம், ஊஞ்சல் போன்றவைகளும் இடம் பெற்றிருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்த ஆற்றுத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து சாமிகள் தீர்த்தவாரிக்கு ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜை செய்து, கொண்டு செல்வார்கள். இதனிடையே இந்த ஆண்டு கொரோனா பரவல் தொற்று காரணமாக 2வது ஆண்டாக நேற்று ஆற்றுத்திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் தென்பெண்ணையாறு வெறிச்சோடி காணப்பட்டது. சாமிகளும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லப்படவில்லை. தடையை மீறி பொதுமக்கள் செல்லாத வகையில், ஆறுகளுக்கு செல்லும் பாதைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Ban Vilupuram ,Kallakuruchi , Villupuram: Tenpennayaru was found deserted due to the ban on the river festival. Thus, the public was disappointed.
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...