சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீர் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, குடிநீர், பாசன மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் வரை சென்று விட்டது. எனவே, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் முடங்கியது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் அபாயகரமான பகுதியாக மாறியிருப்பது நீர்வளத்துறை சார்பில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், தமிழகம் முழுவதும் 1166 பிர்காக்களில் 435ல் நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்பட்ட பகுதியாகவும், 63 பிர்கா அபாயகரமான பகுதியாகவும், 225 பிர்கா பாதி அபாயகரமான பகுதியாகவும், 409 பிர்கா பாதுகாப்பானதாகவும், 34 பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புதன்மை நீர் உள்ள பகுதிகளாக மாறி உள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கும் வகையில் மழை நீர் சேகரிப்பு மற்றும் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, விளிம்பு நிலை பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிக சுரண்டப்பட்ட, சிக்கலான, அரைகுறையான பாதுகாப்பான மற்றும் உப்பு/மோசமான தரமான பிர்காக்கள் ஆகிய பிரிவுகளில் பொருத்தமான மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை ரீசார்ஜ் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீர்வளத் துறை மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவதை தவிர்க்கும் வகையிலும் மற்றும் விளிம்புநிலைப் பகுதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எனவே, அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் அடிப்படையிலான திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
