×

தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய பிரகாஷ்ராஜ் அணியை சேர்ந்த 11 பேர் ராஜினாமா ஏற்பு: விஷ்ணு மன்சு அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கு நடிகர்கள் சங்கமான ‘மா’ என்ற அமைப்புக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 10ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் மோகன்பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மன்சு தலைமையிலான அணி வெற்றிபெற்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் அணி தோல்வி அடைந்தது. பிரகாஷ்ராஜ் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் இல்லை, அவர் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்ற பிரசாரமே பிரகாஷ்ராஜின் தோல்விக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

இதனால், தன்னை ஒரு அந்நியன் போல் பார்க்கும் தெலுங்கு நடிகர்களிடையே இருக்க விரும்பவில்லை என்று சொல்லி, தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் ராஜினாமா செய்தார். அவரது அணியில் இருந்து ‘மா’ அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களாகவும், சங்கத்தின் பொறுப்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் சங்க தலைவர் விஷ்ணு மன்சு, பிரகாஷ்ராஜ் அணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

அவர் கூறுகையில், ‘இத்தனை நாட்களாக அவர்களை சங்கத்துக்காக உழைக்கும்படி சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால், அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன். என்றாலும், அவர்களின் உறுப்பினர் பதவி பறிக்கப்படாது’ என்றார். பிரகாஷ்ராஜ், நாகபாபு ஆகியோரும் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என்று சொன்ன அவர், தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் திட்டத்துக்கான குழுவை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : Prakashraj ,Telugu Actors' Association ,Vishnu Mansu , Telugu Actors Association, Prakashraj, Resignation, Vishnu Manchu
× RELATED அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றியுள்ள...