×

கடத்தல் தங்கம் மாயம் சுங்க அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்: கோழிக்கோடு விமான நிலையத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் மாயமான சம்பவத்தில்  சுங்க இலாகாவை சேர்ந்த 3 கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்தியாவிலேயே  தங்கம் கடத்தல் அதிகமாக நடப்பது கேரளாவில்தான்.  கோழிக்கோடு  விமான நிலையத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பக்ரைனில் இருந்து  ஒருவர்  ஏராளமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் வந்து இறங்கினார்.  சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை பரிசோதித்து பார்த்தனர்.

அப்போது அதற்குள்  தங்கம் மறைத்து வைத்திருந்து தெரியவந்தது.  இதையடுத்து கூடுதல் பரிசோதனை  செய்ய வேண்டும் என்று கூறி அதிகாரிகள் அந்த பொருட்களை வாங்கி வைத்து  விட்டு, 2 நாட்களுக்கு பின் வருமாறு கூறி அந்த பயணியை அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து நேற்று அந்த பயணி தனது  பொருட்களை வாங்குவதற்காக விமான நிலையம்  சென்றார். அப்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  எலக்ட்ரானிக்ஸ்  பொருட்கள் மீண்டும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது.  ஆனால், அதில் தங்கம்  எதுவும் இருக்கவில்லை. தங்கம் மாயமாகியிருந்தது. இதையடுத்து  சம்பவத்தன்று  பணிபுரிந்த 3 சுங்க இலாகா கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். இந்த  சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kozhikode airport , The magic of smuggling gold Customs officials 3 suspended: Kozhikode airport commotion
× RELATED கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் கடத்திய நபர் கைது