×

விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 93 சதுப்பு நிலங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் பள்ளிக்கரணை, விழுப்புரம் மாவட்டம் கழுவெளி, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை ஆகிய பகுதிகளில் 3 சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன. இதில், விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலத்தில் கூழைக்கடா, வர்ண நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், வெண்நிற நாரைகள் மற்றும் பல வெளிநாட்டு பறவைகள் பருவ காலங்களில் இங்கு வருவது வழக்கம். இதை சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து பார்த்து செல்வார்கள்.

இந்நிலையில், இந்த கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலத்தை 5,151.60 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயமாக மாற்றுவது குறித்து தலைமை வனப்பாதுகாவலர் ஒரு கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தார். இதை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்தது. இந்நிலையில், பரிசீலனையை ஏற்றுக்கொண்ட அரசு விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலத்தை 5,151.60 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயமாக மாற்ற அனுமதி அளித்து அரசாணையில் வெளியிட உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




Tags : Villupuram Wetland Bird ,Tamil Nadu , Villupuram Wetland Swamp Birds Sanctuary Notice: Government of Tamil Nadu Government Release
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...