×

கோவிட் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து மக்கள் விரைவாக தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் 11-வது மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (25.11.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-53, தங்கசாலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநிலம் முழுவதும் 11வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 50,000 இடங்களில் இன்று (25.11.2021) நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று 2 இலட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1600 இடங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 6,74,66,158 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 76.23% முதல் தவணை தடுப்பூசியும், 40.31% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 2-வது மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 72 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். 1 கோடியே 1 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

உலக நாடுகளில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கோவிட் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை ஒரு இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக முதன்முதலில் வீடுகளை தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அனைத்து நிலைகளிலும் கோவிட் தடுப்பூசி செலுத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சமீபத்தில் NIE என்கின்ற தேசிய நிறுவனம் மேற்கொண்ட கள கணக்கெடுப்பின்படி சென்னையில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் 32%, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் 35% தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என தெரிய வருகிறது. இதேபோன்று குடிசைப் பகுதிகளில் 21% மக்கள் மட்டுமே முக கவசம் அணிகின்றனர். சென்னையில் உள்ள மால்களில் 51% பேர் முக கவசம் அணிகின்றனர். எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை 100% உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு முதன்மை செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ். மனிஷ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Govt ,Minister ,Ma Subramaniam , Corona, vaccine, essential
× RELATED போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள்...