×

இன்ஜி. துணை கலந்தாய்வு நிறைவு.! மொத்தம் 95,069 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு நிறைவடைந்தது. இதையடுத்து மொத்தம் 95,069 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-22 பொதுக் கலந்தாய்வின் நான்கு சுற்று முடிவில் 89,187 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்தநிலையில் நிரப்பபடாமல் உள்ள பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்விற்கு பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் என மொத்தம் 9,463 பேர் விண்ணப்பப் பதிவு செய்தனர். அவர்களில் பதிவு கட்டணம் செலுத்திய 9,113 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 21 மற்றும் 22ம் தேதி என இரண்டு நாட்கள் மாணவர்கள் விரும்பிய பாடம், மற்றும் கல்லூரிகள் தேர்வு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. இதில் 5882 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு கட்ட கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு முடிவில் மொத்தம் 95,069 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 83,396 மாணவர்களுக்கும், 2020ம் ஆண்டு 78,682 மாணவர்களுக்கும், நடப்பு ஆண்டில் 95,069 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் 2021-22ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை கட்டிடகலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை (25ம் தேதி) தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு வருகிற 27ம் தேதி மாலை 7 மணி வரை விரும்பிய பாடம் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் தரப்படும் என்றும் வருகிற 29ம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுப்பிரிவினருக்கு வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் விரும்பிய பாடம் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் தரப்படும்  என்றும் நவ.1ம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Eng. Sub consultation completed.! A total of 95,069 seats have been filled
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...