×

திமிங்கலத்தின் வாந்திக்கு மவுசு ₹5 கோடி மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல்-5 பேர் அதிரடி கைது

திங்கள்சந்தை  : குமரியில் மிக அதிக விலை மதிப்பிலான திமிங்கலத்தின் வாந்தி மூலம் வெளி வரும் அம்பர் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். திமிங்கலங்கள் வாழ்ந்தாலும் கோடி, மறைந்தாலும் கோடி ஆகும். அந்த வகையில் திமிங்கலங்கள், உணவு சாப்பிட்ட பின் ஜீரண சக்திக்காக ஒரு விதமான மெழுகு போன்ற திரவத்தை வாந்தி மூலம் வெளியேற்றும். திமிங்கலங்கள் வெளியேற்றும் கழிவுகளுக்கு அம்பர் கிரீஸ் என்று பெயர். கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது உருண்டை வடிவம் பெற்று கடற்கரையில் அம்பர்கிரீஸ்  ஒதுங்குகின்றன. விலை உயர்ந்த வாசனை திரவியம் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கு அவை பயன்படுவதால் ஒரு கிலோ அம்பர் கிரீஸ்  அதன் நிறத்துக்கேற்ப பல லட்சம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விலைபோகிறது.

ஒன்றிய அரசு திமிங்கிலத்தின் அம்பர் கிரீசை  சேகரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இயற்கையாகவே கடற்கரையில் ஒதுங்கும் சிறிய அம்பர் கிரீஸ்  உருண்டையை கண்டெடுத்தால் கூட அதுவே அந்த மீனவரின் வாழ்நாள் பொக்கிஷமாக மாறி விடும். கோடிக்கணக்கான மதிப்பு கொண்டதால் அம்பர் கிரீசை ரகசியமாக கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இதை கடத்தினால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படும்.

இந்த நிலையில் நாகர்கோவில் அடுத்த சுங்கான்கடை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட விலை மதிப்புமிக்க ஒரு பொருள் கை மாற இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு  தகவல் வந்தது.  இரணியல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர்கள்  சரவணக்குமார், சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், சுங்கான்கடை பகுதியில்  கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திராகாலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் உள்ளதாக வந்த தகவலின் பேரில் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் வீட்டருகே நின்ற சொகுசு காரிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சொகுசு காரில் ஒரு பையில் சுமார் 5 கிலோ எடையுள்ள 2 துண்டு அம்பர் கிரீஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதன் மதிப்பு பல கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர்.

இதில் ஒருவர் தப்பி விட 5 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களை உடனடியாக இரணியல் காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பண்பொழி அருகே உள்ள சிவராமபேட்ைடயை சேர்ந்த சுப்பிரமணியன் (45), ராமநாதபுரம் மரைக்கால் தெருவை சேர்ந்த சுல்தான் (52), குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த சில்வர் ஸ்டார் (47), திருவட்டார் புத்தன்கடை பகுதியை சேர்ந்த  வர்ஜித் (47), சென்னை பஜனை கோயில் தெருவை சேர்ந்த வரதராஜன் (40) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர் கோட்டார் ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனபாலன் (59) ஆவார். இவர் தான் இந்த வீட்டை வாடகைக்கு பிடித்து இவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனபாலன் மற்றும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

பின்னர் கைப்பற்றப்பட்ட அம்பர் கிரீஸ் மற்றும் பிடிபட்டவர்கள் வேளிமலை வனச்சரகர் மணிமாறனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  மாவட்ட வன அதிகாரி இளையராஜா உத்தரவின் பேரில் பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடந்தது. சென்னையில் இருந்து தான் இதை கொண்டு வந்ததாக கூறி உள்ளனர். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள அம்பர் கிரீஸ் ₹5 கோடிக்கும் அதிகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.  பிடிபட்ட 5 பேரையும்  கைது செய்து நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குமரி மாவட்டத்தில் சமீபத்தில் அவ்வளவு அதிகமானதாக  அம்பர் கிரீஸ் கிடைத்தது இல்லை என்று மீனவர்கள் கூறினர்.

Tags : Monday Market: Amber Grease, the most expensive whale in Kumari, was confiscated. This
× RELATED தாராபுரத்தில் பரபரப்பு கஞ்சா போதையில் நடுரோட்டில் படுத்து ஆசாமி ரகளை