×

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கோஷம்; எடப்பாடி முன்னிலையில் அதிமுகவினர் மோதல்: சாத்தூரில் பரபரப்பு

சாத்தூர்: சாத்தூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுகவினர் இரு கோஷ்டிகளாக மோதி கொண்டனர். ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் விஜயலட்சுமி போட்டியிடுகிறார். திமுக சார்பில் பகவதி போட்டியிடுகிறார். மொத்தம் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விஜயலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இன்று காலை எடப்பாடி பழனிசாமி, சாத்தூர் வெங்கடாசலபுரத்திற்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்எல்ஏக்கள் வந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களின் கார்கள் வந்ததும், கூட்டத்தில் இருந்த சிலர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டதும் ஆத்திரமடைந்தனர். அவரை விமர்சித்து கோஷமிட்டனர்.

ஏற்கனவே முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும், ராஜேந்திரபாலாஜிக்கும் இடையேயான மோதல் உச்சத்தில் உள்ளது. இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனின் ஆதரவாளர்களும், ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனியின் ஆதரவாளர்களும் மோதி கொண்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தகராறை விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தை கண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் அங்கிருந்து வேகவேகமாக புறப்பட்டு சென்றனர்.

Tags : Rajendra Balaji ,AIADMK ,Edappadi ,Sattur , Slogan against Rajendra Balaji; AIADMK clash in the presence of Edappadi: Sensation in Sattur
× RELATED அதிமுக கோஷ்டி மோதல் வழக்கு...