×

தங்கம் விலை 4 நாளில் சவரன் ரூ.736 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் சவரன் ரூ.736 குறைந்துள்ளது. தொடர்ந்து விலை குறைவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தொடர்ந்து உயர்ந்தும் வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ஒரு சவரன் ரூ.35,320க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது.

அன்றைய தினம் சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.34,968க்கு விற்கப்பட்டது. 18ம் தேதி சவரன் ரூ.16 குறைந்து ஒரு சவரன் ரூ.34,952க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதிலும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4,360க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.34,880க்கும் விற்பனையானது.

தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தொடர்ச்சியாக விலை குறைந்து வருவது விசேஷத்திற்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை குறைய தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Gold prices fall by Rs 736 in 4 days: Jewelry buyers happy
× RELATED சிகிச்சைக்கு அழைத்து சென்று கொடூரம் 4...