×

தெருவிளக்கு பராமரிப்புக்கான டெண்டர் தொகை ரூ.27 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக குறைப்பு

* ஆண்டுக்கு ரூ.7 கோடி வரை மிச்சம்
* முறையாக பராமரிக்காவிடில் அபராதம்
* சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் தெரு விளக்குகள் பராமரிப்புக்கான ஆண்டு டெண்டர் தொகை ரூ.27 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.7 கோடி மிச்சமாகும், என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தெருக்கள், உட்புற சாலைகள், பிரதான சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக 10 மண்டலங்களில் சுமார் 1.75 லட்சம் தெரு விளக்குகள் உள்ளன. இந்த தெரு விளக்குகளை பராமரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.27 கோடியில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது.  

ஆனால், பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கவில்லை, மின்விளக்குகள் பழுதானால் உடனடியாக மாற்றப்படுவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆனாலும், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஆண்டு பராமரிப்புக்கான டெண்டர் தொகை அதிகமாக உள்ளது என்றும் புகார்கள் எழுந்தன. ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் பல்வேறு டெண்டர்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகார்களை விசாரித்து, அவற்றை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, அதிமுக ஆட்சியில் சாலை பணிக்கு முறைகேடாக போடப்பட்ட ஒப்பந்தம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து, பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விசாரித்து, முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, தெருவிளக்குகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள், தெரு விளக்குகள் பராமரிப்புக்கான ஆண்டு டெண்டர் தொகையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தெருவிளக்குகள் பராமரிப்புக்கான ஆண்டு டெண்டர் தொகை ரூ.27 கோடி என்பதை ரூ.20 கோடியாக குறைத்துள்ளனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி வரை மிச்சமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முறையாக தெருவிளக்குகளை பராமரிக்கவில்லை என்றால் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Reduction in tender amount for street lighting maintenance from Rs.27 crore to Rs.20 crore
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...