×

நாட்டில் முதல்முறையாக பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கமிஷன்: மம்தா அதிரடி

கொல்கத்தா: நாட்டிலேயே முதல் முறையாக பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்டு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனை ஒன்றிய அரசு மறுக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு உத்தரவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை, ஒன்றிய அரசு அமைதியாக உட்காரந்திருக்கிறது. எனவே, மேற்கு வங்கத்தில் ஏராளமானோரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பாக,  விசாரணை கமிஷனை நாட்டிலேயே முதல்மாநிலமாக மேற்கு வங்கம் அமைத்துள்ளது’’ என்றார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கவலைப்படாத ஒரே நாடு இந்தியா: காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘பெகாசஸ் விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த முழு விவரங்களையும் கேட்டுள்ளார். ஆனால், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து கவலைப்படாத ஒரே அரசு இந்தியாவில்தான் இருக்கிறது’’ என கூறி உள்ளார்.

டெல்லி பயணம் தொடங்கியது
பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைத்த அதிரடியுடன் நேற்று மாலை மம்தா டெல்லி புறப்பட்டார். 5 நாள் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மம்தா பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே பாஜவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென  கடந்த சில நாட்களுக்கு முன் மம்தா அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் பல தலைவர்களை சந்திக்க உள்ளார். நாளை பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் மம்தா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Pegasus , Pegasus affair, Commission of Inquiry, Mamta, Action
× RELATED பெகாசஸ் விவகாரத்தில் இடைக்கால...