×

கொரோனாவால் தவிக்கும் தொழிலாளர்களுக்காக இளம்பெண் நடத்தும் ஊரடங்கு முகாம்!: உடற்பயிற்சி, யோகா, சுயதொழில் என கரைபுரளும் உற்சாகம்..!!

ஈரோடு: ஊரடங்கால் வேலை இழந்தும், ஊர்திரும்ப முடியாமலும் தவித்த தொழிலாளர்களை அரசு பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார் இளம்பெண் ஒருவர். அடிப்படை தேவையான உணவு, இருப்பிடம் மட்டுமின்றி உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வு ஆக்கும் மையமாகவும், தொழிற்பயிற்சி கூடமாகவும் இந்த முகாம் மாறி இருக்கிறது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு. 


ஊரடங்கால் முடங்கிய தொழில்கள். இதனால் நிர்கதியான தொழிலாளர்கள் என பொதுமுடக்கம் தொழிலாளர்களின் வாழ்க்கையை முடக்கிவிட்டது. இதிலும் ஊர்விட்டு ஊர்வந்து கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்தவர்கள் நிலை தான் இன்னும் மோசம். இவ்வாறு ஈரோடு நகரில் நிர்கதியான 70 பேரை இளம்பெண் ஒருவர் தனது குழுவினருடன் இணைந்து அரசு பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து பராமரித்து வருகிறார். 


செவிலியர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் மனிஷா, தாம் நடத்தி வரும் ஜீவிதம் அமைப்பை சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து கருங்கல்பாளையம் அரசு பள்ளியில், இந்த முகாமை நடத்தி வருகிறார். தன்னார்வலர்கள் வழங்கும் உதவியுடன், தொழிலாளர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தினமும் காலை, மாலை உடற்பயிற்சி, யோகாவும் கற்பிக்கப்படுகிறது. 


விளையாட்டுகளும், பாடல், ஆடல் நிகழ்ச்சிகளும் இவர்களின் மன கவலைக்கு மருந்தாக உள்ளது. தொழிலாளர்களில் தனித்திறமை கொண்ட கவிஞர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் அந்த முகாமிலேயே வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி கை தொழில் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கு கூடை பின்னுவதற்கும், முகக்கவசம் தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 


இதனை கொண்டு மிக நேர்த்தியாக தயாரிக்கப்படும் முகக்கவசங்களை முன்கள பணியாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் இலவசமாக கொடுத்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் தவிக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. Tags : Corona , Corona, labor, teenager, curfew camp
× RELATED கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது...