×

மேலிடத்தை சமரசம் செய்ய முயற்சியா? டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுடன் யோகி சந்திப்பு: பிரதமர் மோடியை இன்று பார்க்கிறார்

புதுடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கட்சி தலைமை அதிருப்தியில் இருந்த நிலையில், அமித்ஷாவை சந்தித்தார். இன்று பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இம்மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி மீது கட்சி தலைமை அதிருப்தியில் உள்ளதால், அடுத்த தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் பாஜ.வுக்கு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜ தலைவர் நட்டா உட்பட யாரும் வழக்கமான நடைமுறையில் சமூகவலை தளம் மூலம்  வாழ்த்து தெரிவிப்பதை  தவிர்த்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச தேர்தலை சந்திக்க பாஜ முழுவீச்சில் இறங்கி உள்ளது. முதல் கட்டமாக, மற்ற கட்சி தலைவர்களை இழுக்கும் வேலையை தொடங்கி இருக்கிறது. இம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத், நேற்று முன்தினம் பாஜ.வில் இணைந்தார். இம்மாநிலத்தில் பாஜ மீது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கடும் அதிருப்தியில் இருப்பதால், அத்தரப்பின் வாக்கு வங்கியை குறிவைத்து அதே வகுப்பை சேர்ந்த ஜிதின் பிரசாத்தை பாஜ சேர்த்து கொண்டதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் யோகி நேற்று 2 நாள் பயணமாக டெல்லி வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு 1:45 மணி நேரம் நடந்தது. இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் பாஜ தலைவர் ஜேபி. நட்டாவையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், யோகியின் இந்த வருகை பாஜ தலைமையை சரி கட்டுவதற்கான முயற்சியாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags : Yogi ,Amit Shah ,Delhi ,Modi , Trying to compromise the top? Yogi meets leaders including Amit Shah in Delhi: PM meets Modi today
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...