×

கொரோனா சிகிச்சைக்கு நீதிமன்ற வளாகங்களை பயன்படுத்தலாம்: இஎஸ்ஐ கிளினிக்குகளை தடுப்பூசி மையங்களாக மாற்றலாம் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு நீதிமன்ற வளாகங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், பலியானவர்களின் உடல்களை மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வைத்திருக்காமல் சீக்கிரம் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை  தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சப்ளை, ரெம்டெசிவிர் மருந்தை  சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.

 இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ள போது வாகனங்களில் சாலைகளில் ஏராளமானோர் சுற்றித் திரிகிறார்கள். குழந்தைகளும் கொரோனாவின் தாக்கத்திற்கு ஆளாகிவருகிறார்கள். இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். கவனிக்க ஆள் இல்லாத முதியவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு இல்லாத இதர நோயால் மரணமடைந்தவர்களையும் அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர். அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம்,  கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எச்சரித்து அனுப்பவும், அபராதம் விதிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது பலப்பிரயோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.  மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ஒரு மாதத்தில் தடுப்பூசி உற்பத்தியானது 30 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவில், ” நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாகவோ, தடுப்பூசி மையங்களாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். பரிசோதனைகளை குறைக்க கூடாது. கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை அரசு நேர்மையாக வெளியிட வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் ஆக்சிஜன், மருந்து பெற உதவியாக இருக்கும். கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை மருத்துவமனைகளிலேயே வைத்திருப்பது மற்ற நோயாளிகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் என்பதால் அவற்றை உரிய விதிகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை கண்ணியமாக கையாள வேண்டும். அவர்களின் இறுதி நேரத்திலாவது உரிய மரியாதையை தரவேண்டும்.

 தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் துவங்குவது ஸ்தம்பித்துள்ளது. டொசிலூசூமா மருந்துக்கு நாம் இறக்குமதியை நம்பியே உள்ளோம். இதற்கு மாற்றாக உள்ள உள்நாட்டு மருந்துகளான எக்சாமெதோசோன் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.  இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை பொறுத்தவரை, இ.எஸ்.ஐ உறுப்பினர்களின் நிதியில் அவை செயல்படுத்தப்படுகிறது. அங்கு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிட முடியாது. இ.எஸ்.ஐ. கிளினிக்களை தடுப்பூசி மையங்களாக பயன்படுத்தலாம்.  தமிழகத்தில் ஊரடங்கு  நல்ல முடிவுகளை தந்துள்ளது. அதை   கடுமையாக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குழந்தைகள் சிகிச்சை குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

 அப்போது, மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தற்காலிக ஜாமீன் வழங்குமாறு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், உள்துறை செயலாளர், சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவுக்கு உத்தரவிட வேண்டும். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரைவில் திறக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், சிறைக்கைதிகளுக்கு தற்காலிக ஜாமீன் வழங்குவது குறித்து உயர்மட்ட குழு உரிய முடிவை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் தொடர்பான டெண்டர் வரும் 21ம் ேததி திறக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டு விசாரணையை மே 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Tags : ESI ,Chennai High Court , Court premises can be used for corona treatment: ESI clinics can be converted into vaccination centers: Chennai High Court orders
× RELATED நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு இஎஸ்ஐ வசதி