×

கொரோனா ஒழிப்பு முயற்சிக்கு உதவிக்கரம் நீட்ட அழைப்பு: உலகத் தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குவீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ‘உலகத் தமிழர்களே, உயிர்காக்க நிதி வழங்குவீர்’ என்ற தலைப்பில் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:  கொரோனா என்ற பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. தமிழகம் இப்போது இரண்டு மிக முக்கியமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.  ஒன்று கொரோனா என்கிற நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று, நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிப்பதற்கான முன் முயற்சிகளை தமிழக அரசு முழுமையாகச் செய்து கொண்டு வருகிறது.   கொரோனா முதல் அலையை விட 2ம் அலை மிக மோசமானதாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசிகள் ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும்.

இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குவீர் என்று நான் வேண்டுகோள் வைத்தேன்.  கருணை உள்ளத்தோடு பலரும் நிதிகளைக் கொண்டு வந்து வழங்கி வருகிறார்கள். பலரும் நிதி திரட்டி வருகிறார்கள். புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள், தாய்த் தமிழகத்தை மறக்கவில்லை, மறக்க முடியாது என்பதன் அடையாளம் தான் இது போன்ற நிதி திரட்டும் நிகழ்வுகள் ஆகும். மிகவும் சிக்கலான, நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு மாபெரும் உதவியைச் செய்ய முன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. தமிழக மக்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டி இருக்கிறீர்கள்.  தமிழக மக்களாகிய நாங்களும் உங்களை மறக்க மாட்டோம். மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும்.

 ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். இவை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.  ஆக்சிஜன் பயன்படுத்தும் படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போன்ற கொரோனா தடுப்புக்குத் தேவையான பயன்பாட்டுக்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.  இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளிக்கும் தொகைக்கு வருமான வரியில் விலக்கும் அளிக்கப்படும்.  உங்கள் நிதி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவிகரமாக இருக்கும். மக்களின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Tags : World Tamils ,Chief Minister ,MK Stalin , Call for help to eradicate corona: World Tamils will provide funds to save lives: Chief Minister MK Stalin's request
× RELATED குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை