×

பதிவுத்துறையில் நிர்ணய கட்டணத்தை தவிர்த்து வேறு தொகை வசூலித்தால் ஒழுங்கு நடவடிக்கை: வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை..!

சென்னை: பதிவு அலுவலர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர்த்து வேறு தொகையினை  வசூல் செய்வது தெரியவந்தால் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பதிவுத்துறையின் செயல்பாடுகள் மற்றும் பணி சீராய்வு கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: பதிவுத்துறை பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் பொருட்டு அனைத்து சேவைகளையும் உடனடியாக தாமதமின்றி வாங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த அரசின் வருவாயை பெருக்குதல் அவசியம். எனவே, அரசின் வருவாயை முழுமையாக அடைவதற்கு முழு கவனம் செலுத்த வேண்டும்.

வெளிப்படைத்தன்மையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஆவண பதிவின் போது சார்பதிவாளர்கள் நேரடியாக ஆவணதாரர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். இதில், இடைத்தரகர்கள் தலையீட்டினை தவிர்த்திட வேண்டும். மேலும், அலுவலகத்தில் வெளிப்படை தன்மை உறுதி செய்ய வேண்டும். பதிவு அலுவலர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர்த்து வேறு தொகையினை வசூல் செய்வது தெரியவந்தால் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆவணப்பதிவின் போது இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பையே கடைபிடிக்க வேண்டும்.

மேலும், வழிகாட்டி மதிப்பு இணையதளத்தில் தவறுதலாக உரிய முன்மொழிவை மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவர்கள் வழி அனுப்பி சரிசெய்ய வேண்டும். இதில், தவறும் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பல சர்வே எண்களில் கட்டுப்பட்ட சொத்து ஒரே நான்கு எல்லைக்குள் எழுதப்பட்டு இருப்பின் சில பதிவு அலுவலர்கள் அந்த சர்வே எண்களில் உள்ள அதிகபட்ச மதிப்பை முழு சொத்திற்கும் கடைபிடிக்க வற்புறுத்துகின்றனர். இதுவே தவறான நடைமுறையாகும்.

அந்த சர்வே எண்கள், உட்பிரிவுகளுக்கு உரிய வழிகாட்டி மதிப்பை கணக்கிட்டு கடைபிடித்தால் போதுமானது. மேலும், ஆவண சொத்தில் தொழிற்சாலை ஏதாவது இருப்பின் தொழிற்சாலை கட்டடம் உள்ள சர்வே எண், உட்பிரிவுக்கு மட்டுமே உரிய மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். கட்டம் உள்ள சர்வே எண்களை தவிர்த்து மீதி உள்ள சர்வே எண், உட்புரிவுகளுக்கு வழிகாட்டியில் உள்ள விவசாய மதிப்பையே கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு பின்பற்றாமல் புகார் பெறப்படின் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை கண்காணிக்காத மாவட்ட பதிவாளர் நிர்வாகம், தணிக்கை மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.

Tags : Registry Department of Regulation ,Moorthy , Disciplinary action if the registrar collects any amount other than the prescribed fee: Business Taxation Minister Murthy warns
× RELATED புழல் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை,...