×

மருத்துவ கருவிகள் விலை 100% அதிகரிப்பு: பயத்தை பணமாக்கும் பேராசைக்காரர்கள்... கொரோனா காலத்திலும் கொள்ளை லாபம் வாங்க முடியாமல் சாமானிய மக்கள் தவிப்பு

கொரோனா தொற்று சுனாமி அலையாக உருவெடுத்து பரவி வரும் நிலையில், மருத்துவமனைகள் நிரம்பி பல நோயாளிகள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு அறிகுறியின்றி வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளின் ஆபத்பாந்தவனாக இருப்பது பல்ஸ் ஆக்சிமீட்டர். விரலில் பொருத்தி, உடலில் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் இக்கருவி நோய் தொற்று தீவிரமாவதை காட்டிக் கொடுக்கும். இதனால், வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கட்டாயம் பல்ஸ் ஆக்சிமீட்டர் வைத்திருக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதே போல், நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளின் தேவை அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டர் மானிடரை விட சற்று பெரிதான ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் காற்றிலிருந்து ஆக்சிஜனை மறுசுழற்சி செய்து நமக்கு வழங்கும். பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவியை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். தற்சமயத்தில் மிக அத்தியாவசியமானதாக இருந்து வருகிறது. இதனால் தான், பல்வேறு உலக நாடுகள் முதலில் இந்த கருவியை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளன.

இந்த மருத்துவ கருவிகளின் தேவை பல மடங்கு உயர்ந்து இருப்பதால், இவற்றை பயன்படுத்தி இக்கருவிகளை விற்பனை செய்யும் பேராசை பிடித்த விற்பனையாளர்கள் கொள்ளை லாபம் பார்க்கத் தொடங்கி உள்ளனர். இதன்மூலம், மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர். ஆன்லைனிலும், மருந்து கடைகளிலும் கூட இவற்றின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. உள்ளூர் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, கடந்த 10 நாட்களில் பல்ஸ் ஆக்சிமீட்டர், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் விலையை 100% வரை உயர்த்தி உள்ளனர்.

இவற்றின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென மத்திய அரசு அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்துள்ளது. ஆனாலும், அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு சிலர் அதிகபட்ச சில்லரை விலையை காட்டிலும் அதிகமான விலையை வைத்து விற்பனை செய்து, அதிக லாபம் பார்க்கின்றனர். இதன் காரணமாக சாமானிய மக்கள் அத்தியாவசியமான இந்த மருத்துவ கருவிகளை வாங்க முடியாமலும், அப்படியே வாங்கினாலும் அதிக விலை கொடுக்க வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

அமேசான் நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை அதிகரித்துள்ளது. சில விற்பனையாளர்கள் அதிகபட்ச சில்லரை விலையை காட்டிலும் அதிகமான விலைக்கு ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். அமேசான் கொள்கைப்படி இதனை அனுமதிக்க முடியாது. எனவே, அதுபோன்ற விற்பனையாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை அமேசான் தளத்திலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்,’’ என்றார்.

இந்திய மருத்துவ கருவிகள் வர்த்தக சங்க துணை ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் நாத் அளித்த பேட்டியில், ‘‘பல வர்த்தகர்கள், இறக்குமதியாளர்களிடமும், முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் கூட, கொரோனா அத்தியாவசிய மருத்துவ கருவிகள் விலை கடந்த ஒரு வாரத்தில் 2 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. சில இறக்குமதியாளர்கள் குறைந்த விலைக்கு கருவிகளை வாங்கி, அதை தற்போதைய சூழலை பயன்படுத்தி அதிக விலைக்கு விநியோக நிறுவனங்களுக்கு விற்கின்றனர். கடைசியில் கொள்ளை லாபம் பார்ப்பதாக விநியோக நிறுவனங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது,’’ என்றார். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, கொரோனா மருத்துவ கருவிகள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நியாயமான விலையில் அத்தியாவசிய மருத்துவ கருவிகள் போதிய அளவில் சப்ளை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்,’ என சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

* மாத வாடகை கூட 300% அதிகரிப்பு
ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் ரூ.1 லட்சம் வரை விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் புலம்பித் தீர்த்துள்ளனர். வழக்கமாக, இதன் விலை ரூ.45,000 ஆக இருக்கும். இதேபோல், மாத வாடகையிலும் லாபம் பார்ப்பதை விடவில்லை. ஆக்சிஜன் செறியூட்டி கருவிகள் ரூ.5000க்கு மாத வாடகைக்கு கிடைத்து வந்த நிலையில் தற்போது ரூ.20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

* கடந்த 10 நாட்களில் பல்ஸ் ஆக்சிமீட்டர், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் விலையை 100% வரை உயர்த்தி உள்ளனர்.
* பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை அதிகரித்துள்ளது.
* மற்ற கொரோனா அத்தியாவசிய மருத்துவ கருவிகள் விலையும் கூட, கடந்த ஒரு வாரத்தில் 2 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

Tags : 100% increase in the price of medical equipment: greedy people who monetize fear ... Ordinary people suffer from the inability to make a profit even in the Corona era
× RELATED வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம்...