×

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது: பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் 294 பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதியும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; மேற்கு வங்க மாநிலத்தில் முதலீடுகளை அதிகப்படுத்தி, வளர்ச்சிக்கு வித்திடவே வந்துள்ளேன். மே.வங்க மக்களின் கனவுகளை நிறைவேற்றவே நாங்கள் பாடுபடுகிறோம்.

மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தை பாதுகாத்து, மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரவே நான் வருகை தந்துள்ளேன். நாடு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது மேற்கு வங்கம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். அடுத்த 5 ஆண்டுகளின் வளர்ச்சி மாநிலத்தின் 25 ஆண்டுகள் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். மேற்கு வங்க மக்கள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் இடதுசாரிகள், திரிணாமுல், காங்கிரஸ் கட்சிகள் நிற்கின்றன. தங்கமயமான மேற்கு வங்கத்தைதான் இந்த மக்கள் விரும்புகின்றனர். மாற்றத்தைக் கொண்டுவருவார் என மேற்கு வங்கம் மம்தா பானர்ஜியை நம்பியது.

ஆனால் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு எதுவாக மம்தா பானர்ஜி செயல்படவில்லை. மேற்கு வங்க மக்களைக் காட்டிக் கொடுத்து அவமதித்தவர் மம்தா. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது எனவும் கூறினார்.


Tags : Trinamool ,West Bengal ,Modi , Democracy disrupted under Trinamool rule in West Bengal: Prime Minister Modi's speech at a campaign rally
× RELATED மேற்கு வங்கத்தில் ஈடி சோதனை