×

ஆட்டிப்படைக்கும் தேர்தல் ஜூரம் ஆட்டோ ஓட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் குதிரை வண்டி ஓட்டிய போக்குவரத்து அமைச்சர்: காளையை மட்டும் எந்த அமைச்சரும் அடக்கவில்லை

சென்னை: தேர்தலுக்கு 3 மாதங்களே உள்ளன. இதனால், மக்களை கவருவதற்காக அமைச்சர்கள் போட்டி போடத் தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இரு சக்கர வாகன அணிவகுப்பை நடத்தினார். அந்த அணி வகுப்பில் ஒரு பைக்கில் பின் பக்கத்தில் அமர்ந்திருந்தவர். திடீரென்று கட்சியின் கொடியை பிடித்தபடி எழுந்து நின்றபடியே சென்றார். இதை புகைப்படமாக எடுத்து தனது இணையதள பக்கத்திலும் போட்டிருந்தார். தூரத்தில் இருந்து படம் எடுத்து, இது யார் தெரிகிறதா என்று தன்னை மக்கள் கண்டு பிடிக்கிறார்களா என்று வேறு கேட்டிருந்தார். இந்தநிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் உள்ள பெரியகுரும்பம்பட்டி வரை பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஆட்டோவை  ஓட்டிச் சென்றார். ஆட்டோவில் 4 பெண்களும், 2 சிறுமிகளும் அமர்ந்திருந்தனர். இதற்கு ஏற்றார்போல பாட்ஷா படத்தில் வரும் நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் என்ற பாடலையும் போட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதேபோல, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தன் பங்கிற்கு நேற்று 500 மீட்டர் தூரம் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிச் சென்றார். அவருக்கு பாதுகாப்பாக இரு பக்கமும் பைக்கில் போலீசாரும், தொண்டர்களும் வந்தனர். பின்னால் அவரது கார் வந்தது. ஒரு கட்டத்தில் குதிரை வண்டிக்காரர் வந்து குதிரையை நிறுத்தி அவரை இறக்கி விட்டார். இவ்வாறு சில நாட்களாக மக்களை கவர அமைச்சர்கள் புதுசு புதுசாக யோசிச்சு கலக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் எந்த அமைச்சரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இறங்கி காளைகளை மட்டும் அடக்கவில்லை. அதையும் அடக்கியிருக்கலாம் என்று பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். அதேநேரத்தில் இன்னும் சில வித்தியாசமான அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன பண்ணப் போகிறார்களோ என்று அங்கலாய்த்தபடி உள்ளனர் தமிழக இளைஞர்கள்.



Tags : Auto Driving Health Minister ,Election , alth Minister who drove the auto Juram Auto drove the Minister of Transport who drove the chariot: No minister suppressed only the bull
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...