×

கடல் சீற்றம் உள்ள மாதங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: மீன்பிடி தடை காலத்தை மாற்றக்கோரி வழக்கு

* தடை விதிக்கப்பட்டுள்ள 61 நாட்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள் ஏதுமில்லை.
* வங்கக்கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் அக்.15 முதல் டிச.15 வரையிலான 62 நாட்களை மீன்பிடித் தடைகாலமாக அறிவிக்கலாம்.

சென்னை: மீன் பிடி தடைகாலத்தை மாற்றம் செய்யக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பு கில்நெட் மற்றும் லாங்லைன் டூனா விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  உலகில் அதிக புயல் பாதிப்புக்குள்ளாகும் 6 முக்கிய இடங்களில் வங்காள விரிகுடாவும் உள்ளது.  இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மீனவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். கடந்த 2001ம் ஆண்டு  முதல் மீன் இனப்பெருக்கத்திற்காக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரையிலான 61 நாட்களும் கடலுக்கு செல்ல முடியவில்லை.

தடை விதிக்கப்பட்டுள்ள 61 நாட்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள் ஏதுமில்லை என்று மத்திய அரசிடம் வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.   எனவே, வல்லுநர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை என்ற மீன்பிடி தடைக்காலம் தொடர்பான உத்தரவை ரத்து செய்துவிட்டு,  வங்கக்கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடித் தடைகாலமாக அறிவிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளின் மீன்வளத்துறை, இந்திய மீன்வள ஆய்வுத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை 6 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : fishermen , Impact on livelihoods of fishermen during the months of sea rage: Case seeking change of fishing ban period
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...