×

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு: குண்டாற்றை தூர்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி பகுதியில் உள்ள குண்டாறு மூலம் கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஏராளமான கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருந்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கடலை, கரும்பு போன்ற தானியங்கள் இருபோகமாக விளைச்சல் ஏற்பட்டு வந்தது.

தற்போது சுமார் 15 வருடங்களாக மழை பொய்த்ததாலும், காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் மணல் அள்ளப்பட்டதாலும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. ஆற்றில் நீர்வரத்தின்றி கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ஆற்றுப்பகுதியில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் சிறிதளவு நீர் கூட தேங்குவதில்லை. தேங்கிய நீரை முட்செடிகள் முற்றிலும் உறிஞ்சுகின்றன. விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுவதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாகவும், பிளாட் மனைகளாகவும் மாறி விட்டன. தற்போது மழை பரவலாக பெய்தும் ஒரு சொட்டு நீர் கூட ஆற்றில் வரவில்லை. இதனால் விவசாயகள் கவலையடைந்துள்ளனர். இதன் விளைவாக விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியாகி மாற்றுத் தொழிலை நம்பி வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இக்குண்டாற்றில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் காசி, ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதற்கு சமமாக கருதப்படும். இவ்வாற்றில் திருச்சுழியில் உள்ள கழிவுநீர் முழுவதும் செல்வதால் கூவம் போல் மாறிவிட்டதால் சமூக ஆர்வலர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். நதி இணைப்புத் திட்டத்தின் கீழ் மாநில அரசு காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குண்டாறு காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு இணையான ஆறாகும். இக்குண்டாறு பல ஆண்டுகளுக்கு முன்பு வற்றாத ஜீவநதியாகவும், இப்பகுதியிலுள்ள கண்மாய்கள் நிரம்பி உபரி நீராக கடலில் கலந்தன. இதனால் முப்போகம் விளையும் அளவிற்கு கண்மாய்களில் நீர் ததும்பி இருந்தது. காலங்கள் செல்லச் செல்ல கண்மாய்கள் பராமரிப்பின்றி போனதால் குண்டாற்றில் நீர் வரத்து குறைந்து கருவேல் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. எனவே குண்டாற்றை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : Farmers
× RELATED சீமை கருவேல மரங்களை அகற்ற நிதி வழங்க...