×

நிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..?

நன்றி குங்குமம்

கடந்த வாரம் சென்னைவாசிகளை கொரோனாவைவிட அதிகமாக பீதிக்குள்ளாக்கியது வெள்ள பயம்தான். ‘‘செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. 2015 வெள்ளம் போல இந்த வருடமும் வெள்ளத்துடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டியதுதான்...’’ போன்ற ஏராளமான பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆட்கொண்டன.
ஆனால், 2015ல் நடந்தது ஒரு கெட்ட கனவு. அதுபோல இந்த வருடம் நடக்க வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். இது தொடர்பாக செம்பரம்பாக்கத்தில் வசித்து, அதுபற்றி ஒரு புத்தகத்தையும் எழுதிய சுற்றுச்சூழல்வாதியும் வழக்குரைஞருமான கி.நடராஜனிடம் பேசினோம். ‘‘2015ல் நிகழ்ந்த வெள்ளத்துக்குக் காரணங்கள் பல. அதில் ஒரு சிறு பங்குதான் செம்பரம்பாக்கம். அந்த ஆண்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னையைச் சுற்றிய புறநகர்களில் பலத்த மழை பெய்தது. அதனால் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாமல் பூண்டி, புழல், சோழவரம் உட்பட நடுத்தர, சிறு ஏரிகள்கூட நிறைந்து வழிந்தன. எல்லா ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் அதன் உபரி நீர் செம்பரம்பாக்கத்துக்கு வந்து சேர்ந்தது. அத்துடன் செம்பரம்பாக்க ஏரியை ஒரேயடியாக திறந்துவிட்டனர். வெள்ளம் ஏற்பட்டது. அன்று ஏரியைச் சுற்றிய பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு இருந்தது. இன்றும் இருக்கிறதுதான். ஆனால், அன்று நடந்ததைப் போல இப்போது நடக்காது...’’ என்று நம்பிக்கையுடன் பேசிய நடராஜன் அதற்கான காரணங்களையும் விளக்கினார். ‘‘சென்னையில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையில் சுமார் 40 சதவீதம்தான் கடந்த வாரம் பெய்திருக்கிறது.

அப்புறம் எப்படி செம்பரம்பாக்கம் இவ்வளவு நிறைந்திருக்கிறது என்று கேட்கலாம். சென்னையில் மழை பெய்வதற்கு முன்பாகவே ஆந்திராவில் மழை பெய்து கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரை புரண்டோடியது. கிருஷ்ணா நதியின் உபரி நீர்தான் சென்னையின் பூண்டி, புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு வந்து அங்கிருந்து செம்பரம்பாக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. அதாவது சென்னையில் மழை வருவதற்கு முன்பாகவே செம்பரம்பாக்கம் ஏரியில் 17 அடி நீர் நிரம்பிவிட்டது. சென்னையில் பெய்த மழையால் மேலும் 4 அடி உயர்ந்திருக்கிறது. இப்போதைக்கு 21 அடி நீர் செம்பரம்பாக்கத்தில் இருக்கும். செம்பரம்பாக்கத்தின் நீர் கொள்ளளவு 24 அடி என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீரைத் திறந்துவிட இன்னும் 3 அடி சேரவேண்டும்...’’ என்கிற நடராஜன், ‘‘செம்பரம்பாக்கத்தின் நீர் கொள்ளளவான 24 அடியையும் தாண்டி மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளத்துக்கு வாய்ப்பில்லை...’’ என திட்டவட்டமாகச் சொல்கிறார். ‘‘சென்னையின் பெரிய ஏரிகளின் கரையை உயர்த்தியும் பலப்படுத்தியும் இருக்கிறார்கள். 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் சைதாப்பேட்டை, அடையாறைச் சுற்றிய பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொருளாதார, உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அதற்குப் பிறகு அடையாற்றின் கரையைக் கடல் மட்டத்துக்கு உயர்த்தி பலப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல செம்பரம்பாக்கத்தின் கொள்ளளவைத் தாண்டிக் கரையை 10 அடி வரை உயர்த்தியிருக்கிறார்கள். இதை மற்ற பெரிய ஏரிகளிலும் செய்திருக்கிறார்கள். அத்துடன் 2015 மாதிரி ஒரேயடியாக எல்லாவற்றையும் திறந்து விடுவதற்கான வாய்ப்பில்லை. காரணம், மழைக்காலங்களில் அரசின் பொதுப்பணித்துறையும், காவல்துறையும், சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும், நெட்டிசன்களும் தேவைக்கு அதிகமாகவே இதுபற்றி அக்கறை எடுத்து வருகின்றனர். அதனால் இந்த முறை அரசாங்கமோ அல்லது ஏரிகளை ஒட்டியிருக்கும் தனியார் நிறுவனங்களோ கரைகளை உடைக்க முடியாது. அப்படியே நடந்தாலும அது சிறு ஏரிகளை ஒட்டிய இடங்களில்தான் நடக்க வாய்ப்புண்டு.

‘செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி விட்டது. அந்த நீரை ஒரேயடியாகத் திறந்துவிடாமல் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்துவிடுங்கள்’ என்று அக்கறை எடுத்துக்கொள்பவர்களைப் பார்க்கும்போதுதான் பொறுக்கவில்லை. ஏரி என்பது நீரைத் தேக்குவதற்கான ஒரு முறை. தேக்கினால்தான் சென்னைக்கு அடுத்தவருடம் முழுவதும் குடிநீர் கிடைக்கும். ஆகவே, இந்த விஷயத்தில் அரசும் பொதுமக்களும் பொறுமையாக நடந்துகொள்வதே எதிர்காலத்துக்கு உதவும். பீதிகளை வைத்து இயங்குவது ஒருபோதும் பிரச்னைகளுக்கான தீர்வாகாது...’’ என்று காட்டமாக முடித்தார் நடராஜன்.

தொகுப்பு: டி.ரஞ்சித்

Tags : Chennai , Overflowing Sembarambakkam, Chennai, floods
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில்...