×

லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகம் வீட்டில் ரூ.4.77 லட்சம் சிக்கியது

ஆலந்தூர்: ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.77 லட்சம் சிக்கியது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிகளவில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் ரூபாய், தங்க நாணயம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் பல்லாவரம் நகராட்சி அலுவலகம், அண்ணாநகர் எலைட் டாஸ்மாக் கடை, நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் காஞ்சிபுரம் டிடிசிபி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.3.90 லட்சம் சிக்கியது. இந்நிலையில், ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவின்போது அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குமரகுரு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தனது காரில் ஏறி அங்கிருந்து செல்ல முயன்ற சார் பதிவாளர் ஜெயப்பிரகாஷை மடக்கி பிடித்து, அவரது அறையில் சோதனை நடத்தினர். அங்கு, முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.77 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தி, அங்கிருந்த ரூ.4 லட்சம் லஞ்ச பணத்தையும் கைப்பற்றினர். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anti-Corruption Department ,affiliate ,Alandur ,home , The Anti-Corruption Department raided the Alandur affiliate's office and found Rs 4.77 lakh
× RELATED மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்