×

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ, வழங்கவோ கூடாது: உறுதிமொழி படிவங்கள் பெறும் பணி தீவிரம்

வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ அல்லது வழங்கவோ கூடாது என்று உறுமொழி படிவம் பெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் சாதாரண நிலை ஊழியர்கள் வரை தாங்களோ அல்லது தங்கள் மகன் அல்லது மகளுக்கோ வரதட்சணை வாங்குவதோ அல்லது வழங்குவதோ கூடாது. இதற்கான அரசாணையும், வழிகாட்டல்களும் ஏற்கனவே அனைத்துத்துறைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசு ஊழியர்கள் தங்கள் திருமணத்தின்போதோ அல்லது தங்கள் மகள், மகன் திருமணத்தின்போதோ வரதட்சணை வாங்குவதும், வழங்குவதும் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதோடு சமீபத்தில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனைகளிலும், அமலாக்கப்பிரிவு சோதனைகளிலும் சிக்கும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், நகைகள் மற்றும் ரொக்கம் போன்றவை தங்களின் அல்லது தங்கள் மகள், மகன் திருமணத்தின்போது வழங்கப்பட்ட வரதட்சணை அல்லது அன்பளிப்புகளாகவே வந்ததாக கணக்கு காட்டப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல் அறியும் சட்டத்தின் கீழும் கேள்விகள் எழுப்பப்பட்டு அரசுக்கு மனுக்கள் குவிந்து வருகின்றன. இதனால் அனைத்து அரசு ஊழியர்களிடமும், அவர்களோ அல்லது அவர்களின் மகன் அல்லது மகள் திருமணத்துக்காக யாரிடமும் வரதட்சணை வாங்குவதோ அல்லது வழங்குவதோ இல்லை என்ற உறுதிமொழி படிவங்கள் உரிய அரசாணையுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களின் கையெழுத்துடன் துறைத்தலைவர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இப்பணி அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின்படி ஊரக வளர்ச்சித்துறையில் வரதட்சணை தொடர்பான உறுதிமொழி படிவங்களை பூர்த்தி செய்து பெறும் பணி தீவிரமடைந்துள்ளது.

Tags : Government employees ,Tamil Nadu , Government employees throughout Tamil Nadu should not receive or give dowry: Intensity of work on receiving pledge forms
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்