×

11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்

சென்னை,:அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. அதனால் கோபம் அடைந்த ஓபிஎஸ், பொதுக்குழுவில் அறிவித்தபடி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைத்தபிறகுதான் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். இன்று 2வது நாளாக தனது ஆதரவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டது.

இருவரின் ஆதரவாளர்களும், போஸ்டர் யுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து கடந்த 18ம் தேதி சென்னை, ராயபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும், கடந்த 28ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்து பிரச்னை எழுப்பட்டது. குறிப்பாக, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தனர்.
ஆனாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் அறிவித்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தும் வகையில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதலில் அமைக்க வேண்டும். அந்த குழுவே முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் என்று அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்திலேயே நிராகரித்ததுடன், அதிமுகவுக்கு துரோகம் செய்தது நீங்கள் (ஓபிஎஸ்)தான் என்று ஆவேசமாக பேசினார். இதனால் செயற்குழு கூட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தி, வருகிற 7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினர். இதனால் 5 மணி நேரம் நடந்த செயற்குழு கூட்டத்தில் எந்த முடிவும் ஏற்படாமல் முடிவடைந்தது.

கடைசியாக நடந்த இரண்டு கட்சி கூட்டங்களிலும் தனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கருதினார்.
 இதனால் கோபம் அடைந்த ஓபிஎஸ், நேற்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அனைத்து மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். முதல்வர் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரம், தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோருடன் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவரை முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆகியோர் வந்து சந்தித்தனர். நேற்று இரவு அமைச்சர் உதயகுமார் வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வந்து சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்ததும் அமைச்சர் உதயகுமார் முதல்வர் எடப்பாடியையும் சந்தித்தார்.

முன்னதாக நேற்று மாலை முதல்வர் எடப்பாடியை அமைச்சர் வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினர். இப்படி இரண்டு பேரும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது அதிமுக தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 10 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர். அவரது வீட்டு முன் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள், `ெஜயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ், வருங்கால முதல்வர் ஓபிஎஸ், நிரந்தர முதல்வர் ஓபிஎஸ், அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஓபிஎஸ்’ என கோஷம் எழுப்பினர்.

இன்று காலை சென்னை மாநகராட்சி சார்பில் தீவுத்திடலில் அரசு விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம், அவரது துறையான வீட்டுவசதி துறை சார்பில் இன்று காலை 11 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள எம்எம்டிஏ அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதே நேரம் முதல்வர் எடப்பாடியுடன் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ் புறக்கணித்து வருகிறார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சமரசபடுத்தும் முயற்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ”கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மிகவும் மனஉளைச்சலில் உள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால், 2017ம் ஆண்டு பொதுக்குழுவில் முடிவு எடுத்தபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதலில் அமைக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதமாக உள்ளார். வழிகாட்டு குழு அமைத்த பிறகே அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதில் இருந்து அவர் இறங்கி வர மறுக்கிறார். அவர் ராஜினாமா செய்வார் என்ற தகவல் உண்மை இல்லை.

அதிமுக கட்சியிலும், துணை முதல்வர் பதவியிலும் அவர் தொடர்ந்து நீடிப்பார். அதே நேரம் தனக்குள்ள அதிகாரத்தை அவர் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும், தற்போது மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று கருதுகிறார்.ஆனாலும், முதல்வர் வேட்பாளர் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதிமுக உள்கட்சி மோதல் முடிவுக்கு வந்து, வருகிற 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவிப்பார்கள்” என்றார்.



Tags : O. Panneerselvam ,steering committee ,candidate ,Chief Ministerial , Chief Ministerial Candidate, O. Panneerselvam , Obstinacy
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்