×

மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழகத்துக்கு மருத்துவ உட்கட்டமைப்புக்காக ரூ.3,000 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி நேற்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக விவாதித்தார்.

இதில் முதல்வர் எடப்பாடி பேசியதாவது:
கொரோனா தொற்றுநோயை கையாள்வதில் உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கும், ஆதரவுக்கும் நன்றி. இதுவரை 26 மாவட்டங்களில் நான் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டேன் மற்றும் ஆய்வு செய்தேன். இது தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விவசாய நடவடிக்கைகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பிற தொழில்கள் கிட்டத்தட்ட மீண்டும் பழயை நிலைக்கு திரும்பிவிட்டன. நாட்டில் அதிகபட்ச ஆர்டி-பிசிஆர் சோதனைகள் நடத்தப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இச்சோதனையை மட்டும் பயன்படுத்துகிறோம்.  

தமிழ்நாடு தற்போது கோவிட் சோதனைக்காக 176 ஆய்வகங்களை கொண்டுள்ளது. இதில், 66 அரசு மற்றும் 110 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இதுவரை 66,40,058 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5,52,674 நபர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாநிலத்தில் 46,350 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். பிசிஆர் சோதனைகளின் செலவில் குறைந்தபட்சம் 50 சதவீத நிதியை பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து நிதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் சிறப்பான மருத்துவ சிகிச்சை காரணமாக மாநிலம் குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறது.

இது இப்போது 1.62 சதவீதமாகவுள்ளது. இதுவரை 4,97,377 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது சுமார் 90 சதவீதம் மீட்பு விகிதமாகும். அரசின் நடவடிக்கையால் ஜூலை மாதத்தில் 10.47 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக குறைந்துள்ளது.
கோவிட் காரணமாக ஏற்படும் இறப்புகள் ஒருநாளைக்கு சராசரியாக 100ல் இருந்து 70 இறப்புகளாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் 2,300 ஆக இருந்த பாதிப்பு தற்போது 1,000க்கு கீழே குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்திய மருத்துவ முறையை ஊக்குவித்தது. கபசுர குடிநீர், துத்தநாகம் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

தினமும் 3,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. 1.60கோடி மக்கள் சோதிக்கப்பட்டுள்ளனர். அடிமட்டத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்காக 2,000 மினி கிளினிக்குகள் நிறுவப்படும் என அறிவித்துள்ளேன். தமிழகத்தில் கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தியை மேற்படுத்துவதற்காக மூலதன மானியம், வட்டி விலக்குகள் உள்ளிட்ட சிறப்பு ஊக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 50 நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கியுள்ளது. முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.

எம்எஸ்எம்இ பிரிவுகளுக்கு அதிகபட்ச கடன்களை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன். இதன்காரணமாக 2,46,125 எம்எஸ்எம்இ யூனிட்டுகளை உள்ளடக்கிய 8,019.51 கோடி ரூபாய் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 712.64 கோடி ரூபாயில், 511.64 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளோம். எனது முந்தைய வேண்டுகளின்படி தமிழகத்திற்கான இந்த தொகுப்பு 3,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும். நெல் கொள்முதலை எளிதாக்க வேண்டும். யுஜி மருத்துவத்திற்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* முதல்வருக்கு பிரதமர் பாராட்டு
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று, காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கினை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. நோய் அறிகுறிகளைக் கண்டறிவதிலும், கொரோனா நோய் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிவதிலும் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆர்டி-பிசிஆர் சாதனங்கள் மூலம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு எடுத்துள்ளதால் இறப்பு சதவிகிதம் மேலும் குறையுமென எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மட்டும் நோய் அதிகளவில் இன்னும் காணப்படுகிறது. எனவே, இதற்கு தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் ஆயூஷ் சஞ்சீவனி செயலியினை தமிழ்நாடு சிறப்பாகப் பயன்படுத்தி தொலை மருத்துவத் துறையில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டின் அனுபவம் இந்தியாவிற்கே உதாரணமாகத் திகழ்கிறது. இது நாட்டின் பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் என நம்பிக்கை எனக்கு உள்ளது.

Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu , Rs 3,000 crore should be provided to Tamil Nadu for medical infrastructure: Chief Minister Edappadi Palanisamy's request
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்