×

கொரோனா காலத்திலும் அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர்: தனியார் பள்ளிகளில் இருந்து விலகினர்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஒருமாதமாக நடக்கிறது. இதில், தனியார் பள்ளிகளில் படித்து வந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை கூர்ந்து கவனித்து வருவதால், எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறையின் இஎம்ஐ கணினி தளத்தில் பதிவு செய்யவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை செப்டம்பர் 30ம் தேதி வரை நடப்பதால் அக்டோபர் 5ம் தேதி தான் தமிழகம் முழுவதும் மாணவர்கள் சேர்ந்த முழு விவரங்கள் தெரிய
வரும்.

மாணவர்கள் விவரம் அனுப்ப வேண்டும்
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு, இந்த கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் பிளஸ்2 வரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அதற்கான ஏ படிவத்தில் பள்ளிகள் வாரியாக பெறவேண்டும்.

அதை பி-படிவத்தில் தொகுத்து வழங்க வேண்டும்.  அதேபோல், இந்த கல்வியாண்டு 2020-21ம் கல்வியாண்டில் வரும் 30ம் தேதி வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் சி படிவத்தில் பள்ளிகள் வாரியாக பெறவேண்டும். டி படிவத்தில் தொகுத்து வழங்க வேண்டும். அதை தனித்தனியாக பள்ளிக்கல்வி இயக்குனருக்கு இ-மெயில் மூலம் வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : government schools ,Corona ,schools , 15 lakh students enrolled in government schools during the Corona period: dropped out of private schools
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...