×

போலி ஆவணங்கள் தயாரித்து மூதாட்டி வீட்டை அபகரிக்கமுயன்றவர் சிறையிலடைப்பு

பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (81). இவர்,  தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி கணவனுடன் வசிக்கின்றனர். சரோஜாவுக்கு சொந்தமான வீட்டில்  முனுசாமி (எ) ஸ்டீபன் (40) பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.  இந்நிலையில், சரோஜா தனது வீட்டின் இடத்தை அளக்க வருவாய் துறையில் மனு செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் வருவாய் துறை அதிகாரிகள் அந்த இடத்தை அளக்க வந்தனர். அப்போது, இந்த வீட்டை சரோஜா தனக்கு எழுதி கொடுத்து விட்டதாக கூறிய ஸ்டீபன் அதற்கான ஆவணத்தை காண்பித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சரோஜா, இதுபற்றி நசரத்பேட்டை போலீசில் புகாரளித்தார். விசாரணையில், சரோஜாவின் வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்த ஸ்டீபன் அவரது மகனை போல் பழகி உள்ளார்.
மேலும் சரோஜாவுக்கு வயதாகி விட்டதால் வெளியே செல்ல முடியாத சூழலில் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஸ்டீபன் எடுத்து வந்து கொடுப்பது வழக்கம். அதில் ரூ.5 ஆயிரம் எடுப்பதற்கு காசோலை கொடுத்தால் அதனை ரூ.50 ஆயிரமாக மாற்றி பணத்தை எடுத்து ஏமாற்றியுள்ளார். இதேபோல் சுமார் ரூ.4 லட்சம் வரை  ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், சரோஜாவுக்கு சொந்தமான வீட்டை, போலி ஆவணங்கள் மூலம் ஸ்டீபன் அவரது பெயருக்கு மாற்றி எழுதி உள்ளார்.

அதுமட்டுமின்றி இவருக்கு சொந்தமான 6 வீடுகளில் இருந்து வரும் வாடகை தொகை ரூ.8 லட்சத்தை ஸ்டீபன் மோசடி செய்துள்ளதாகவும் வீட்டில் இருந்த மற்றொரு நிலத்தின் ஆவணங்களையும் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : house , mprisonment of a person who tried to rob an old woman's house by producing fake documents
× RELATED ஈபிஎஸ் நண்பர் இளங்கோவன் வங்கி...