×

அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம் முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்தான்: தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் திடீர் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2021ம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் என தேனி மாவட்டம் முழுவதும் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல்  பிரசாரத்தின்போது அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செல்லூர்  ராஜு, தேர்தலுக்கு பிறகு எம்எல்ஏக்கள்தான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்று கூறினார்.

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி வருகின்றனர். அமைச்சர்  ஜெயக்குமார், அதிமுக தலைமை இதுகுறித்து முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருத்தரும் ஒரு கருத்தை கூறி  வருவதால் தற்போது மோதல் போக்கு எழுந்துள்ளது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சீனியர் தலைவர்கள் திணறி வருகின்றனர். இந்த  பரபரப்பான சூழ்நிலையில்தான் பாஜ துணை தலைவராக உள்ள வி.பி.துரைசாமி, சில நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்தபோது, `வரும்  தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே தான் போட்டி.

பாஜ தலைமையில்தான் கூட்டணி அமையும்’’ என்றார். அவரது கருத்து அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த வியாழக்கிழமை ஒரு டிவிட்டர்  பதிவு செய்தார். அதில், “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்ற பாடலை குறிப்பிட்டு இருந்தார்.
நாளை நமதே என்ற வார்த்தையை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி அறிக்கை விட்டுள்ளது, மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர்  வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னையே (ஓபிஎஸ்) முன்னிலைப்படுத்த வேண்டும் என்று மறைமுக கட்சி நிர்வாகிகளுக்கு  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து மூத்த அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி,  வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். குறிப்பாக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோரும் ஒதுங்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேனி மாவட்டம் முழுவதும் நேற்று ஜெயலலிதாவின் ஆசிபெற்ற ஒரே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்ற  போஸ்டர் ட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டம் போடி ஒன்றியம் கெஞ்சம்பட்டி கிராம பொதுமக்கள் பெயரில், “2021ம் ஆண்டு அதிமுக  முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்” என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஆகும். அதனால், அவரது ஆதரவாளர்கள்  தான் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுக அமைச்சர்கள்  மற்றும் நிர்வாகிகளிடையே யார் அதிமுக முதல்வர் வேட்பாளர் என்று உச்சக்கட்ட மோதல், பாஜ மிரட்டல் தமிழக அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : candidate ,clash ,Theni ,AIADMK ,agitation ,Chief Ministerial ,OBS , AIADMK, Chief Ministerial Candidate OBS, Theni, Poster
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்