×

புதிய உச்சத்தை தொட்டது தமிழகத்தில் கொரோனாவுக்கு முதன்முறையாக 127 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநில அளவில் மொத்தமாக 3,32,105 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கையை பொறுத்த அளவில் நேற்று ஒரேநாளில் முதல்முறையாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக 5,641 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல  மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் 100க்கும் மேல் தான் இறப்பு எண்ணிக்கை பதிவாகிறது. அந்த வகையில்  தமிழகத்தின் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என்று அரசு கூறினாலும், கடந்த 13 நாட்களாக 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருவது மக்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அலட்சியமாக  செயல்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று  69,598 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,860 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3,32,105 ஆக  உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 2,00,253, பெண்கள் 1,31,823, திருநங்கைகள் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 5,236 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 2,72,251 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 54,213 பேர் உள்ளனர். மேலும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 127 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 44 பேரும், அரசு  மருத்துவமனையில் 83 பேரும் அடங்குவர். உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,641  ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாவட்டங்கள்
தமிழகத்தில் 5,641 பேர் கொரோனாவால் பாதித்து உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,434 பேர், செங்கல்பட்டு 339, கோவை 171, காஞ்சிபுரம் 173, கன்னியாகுமரி 111, மதுரை 315, தேனி 115,  திருவள்ளூர் 327, திருவண்ணாமலை 118, நெல்லை 115, வேலூர் 110, விருதுநகர் 152 என 12 மாவட்டங்களில் இதுவரை 4,480 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை-1179
சென்னையில் 6ம் தேதி 1,091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு 7ம் தேதி முதல் ஆயிரத்துக்கு கீழ் தொற்று பாதிக்கப்பட்ட  நிலையில் 8 நாட்களுக்கு பிறகு அதாவது நேற்று முன்தினம் முதல் ஆயிரத்துக்கும் மேல் 1,187 பேரும், அதைத்தொடர்ந்து நேற்று 1,179 பேருக்கும்  தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் தொற்று மீண்டும் அதிகரிப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட, மத்திய மாவட்டங்களில் பாதிப்பு
கொரோனாவால் அதிகம் வட, மத்திய மாவட்டங்களில் தான் இறப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 26 பேர், அரியலூர் 1,   செங்கல்பட்டு 5, கோவை 6, கடலூர் 1, தருமபுரி 1, திண்டுக்கல் 4, ஈரோடு 2,  கள்ளக்குறிச்சி 3, காஞ்சிபுரம் 4, கன்னியாகுமரி 3, கிருஷ்ணகிரி 1,  மதுரை 6,  நாமக்கல் 3, புதுக்கோட்டை 7, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 5, சேலம் 1,  சிவகங்கை 3, தென்காசி 2, தஞ்சாவூர் 7, தேனி 3, திருவள்ளூர்  3, திருவண்ணாமலை  4, திருவாரூர் 1, தூத்துக்குடி 2, நெல்லை 5, திருப்பூர் 3, திருச்சி 5,  வேலூர் 3, விருதுநகர் 6 என 127 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Corona , Tamil Nadu, Corona
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...