×

பொதுமக்கள் இடம்தர மறுப்பதால் தமிழகத்தில் 3,501 நடமாடும் ரேஷன் கடை: சென்னைக்கு 400 ஒதுக்கீடு; அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் 400 ரேஷன் கடைகள் சென்னையில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். பொதுமக்கள் ரேஷன் கடைகள் அமைக்க இடம் தர மறுப்பதே நடமாடும் கடைகள் வருவதற்கு காரணமாகி விட்டதாக கூறினார். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாழ்திறனை அதிகரிக்கும் வகையில், பல்வகை சேவை மையங்களாக மாற்றுவதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி உடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனர்.  

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு, இந்தியாவில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில் பயிர்க்கடன் வழங்குவதற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கான ரூ.11,000 கோடியில் நபார்டு வங்கி, தனது மறுநிதி கடன் வரம்பை அறிவிக்கவில்லை. ஆனால், கூடுதல் கடன் வரம்பாக ரூ.2700 கோடியை 5.3 சதவிகித வட்டியில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த கடன் வரம்பிற்கு பதிலாக, ரூ.5000 கோடியை வழக்கமாக வழங்கப்படும் 4.5 சதவிகித வட்டியில் வழங்கிடவும், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 201 சங்கங்களை பல்வகை சேவை வழங்கும் மையங்களாக மாற்றிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32,970 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் பல கடைகளில் 2,500 கார்டுகளுக்கும் மேல் உள்ளது. ரேஷன் கடைகள் வைக்க பலர் இடம் தர மறுக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் புதிதாக 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் 400 ரேஷன் கடைகள் சென்னையில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : ration shops ,Chennai ,Tamil Nadu , Public, Tamil Nadu, 3,501 mobile ration shop, Chennai 400 allotment, Minister Information
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...