×

கொரோனா பாதிப்பு குறைந்த வெளிநாடுகளில் இந்திய படப்பிடிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக இந்திய திரையுலகம் முடங்கி கிடக்கிறது. படப்பிடிப்புகள் நடக்கவில்லை, தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் பல நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாதிப்பு குறைந்த வெளிநாடுகள் பலவற்றிலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டிருப்பதோடு படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அப்படி அனுமதி வழங்கும் நாடுகளில் இந்திய படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. அக்‌ஷய்குமர், ஹுமா குரேஷி நடிக்கும் பெல்பாட்டம் இந்தி படத்தின் கதை இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் நடப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்புக்காக அக்‌ஷய்குமார் உள்ளிட்ட 70 பேர் தனி விமானத்தில் ஸ்காட்லாந்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் 10 நாள் வரை தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை முடித்த பிறகு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதேபோல பிரபல ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதனை ஆமிர்கான், லால்சிங் சட்டா என்ற பெயரில் தயாரித்து நடிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் துருக்கியில் தொடங்கி உள்ளது. ஆமிர்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதேபோல வெளிநாட்டில் படமாக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகளை மீண்டும் தொடர சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பல படங்களின் தயாரிப்பாளர்கள் அனுமதி கேட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் தயாராகி பாதியில் நிற்கும் படங்களை தொடர மத்திய அரசே சம்பந்தப்பட்ட நாடுகளை அணுகி அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறைக்கு கடிதம் எழுதவும் இருக்கிறது.


Tags : shooting ,Indian , Corona vulnerability, low overseas, Indian shooting
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...