×

ரவுடியை மடக்கி பிடிக்க முயன்ற எஸ்ஐ கால் எலும்பு முறிந்தது: வாகன சோதனையில் பரிதாபம்

ஆவடி: சென்னை காவல் மாவட்டத்தில் நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கையொட்டி முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலை, போலீஸ் பூத் அருகில் எஸ்ஐ ரவி தலைமையில் ஊர்காவல் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வேகமாக பைக்கில் வந்தவரை போலீசார் மடக்கினார். ஆனால், பைக்கை நிறுத்தாமல் வேகமாக வந்த அவர், எஸ்ஐ ரவி மீது மோதினார். இதில், அவர் தூக்கி வீசப்பட்டு இடது காலில் முறிவு ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த ஊர்க்காவல் படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை அருகில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து பூட்டிவிட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த அவர், பூத் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையிலான போலீசார், படுகாயமடைந்த எஸ்ஐ ரவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் வில்லிவாக்கம் பாரதி நகர் முதல் தெருவை சேர்ந்த ரவுடி கணேசன் (24) என்பதும், இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கஞ்சா போதையில் இருந்த ரவுடி கணேசன், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது, எஸ்ஐ ரவி மீது பைக்கை ஏற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கணேசன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

Tags : SI ,vehicle test , Rowdy, attempted SI leg, fractured, vehicle tested, awful
× RELATED காதலி பேசுவதை நிறுத்தியதால் 3வது மாடியில் இருந்து குதித்தவர் கால்முறிவு