×

சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய், போதை பொருட்கள் பறிமுதல்: இன்ஸ்பெக்டர் துணையுடன் சோதனையை தடுத்ததால் பரபரப்பு

சென்னை: சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு போதை பொருட்கள் மற்றும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது இன்ஸ்பெக்டர் துணையுடன் டிஎஸ்பி தடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தமிழக காவல் துறையில் சிபிசிஐடியில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை டிஎஸ்பி, அருண் என்பவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வாடகை விட்டுள்ளார். இதற்கிடையே தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு டிஎஸ்பி ஒருவரின் அடுக்குமாடி குயிருப்பு வீட்டில் குடோன் போல் அதிகளவில் வெளிநாட்டு போதைப் பொருள் மற்றும் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அதிரடியாக கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு போதை பொருட்கள், கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் போதை பொருட்களை பாக்கெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் மெஷின், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஒருவருடன் சென்று சோதனையில் ஈடுபட்டு வந்த தேசிய போதை பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளை தடுத்துள்ளனர். பிறகு வேறு வழியின்றி சோதனை நடத்த முடியாத நிலை இருந்ததால் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டிஎஸ்பி வீட்டை சீல் வைத்துவிட்டு திரும்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. சோதனையின் போது வீட்டில் இருந்த அருண் என்பரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த போதை பொருட்களை பதுக்கி வைத்து பின்னர் போதை பொருள் விற்பனை செய்யும் முகவர்களுக்கு பிரித்து அனுப்பும் மையமாக இந்த வீட்டை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. எத்தனை மாதங்களாக போதை பொருள் கடத்தல் நடந்துள்ளது. இதற்கு பின்னணியில் யார் உள்ளனர்? சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து கைது செய்யப்பட்ட அருணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம், டிஎஸ்பி வீட்டை அருண் என்பவருக்கு வாடகைக்கு மட்டும் தான் விட்டேன். மற்றப்படி போதை பொருளுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள், வாடகைக்கு விடும் போது போட்ட ஒப்பந்த பத்திரம் கொண்டு வரும் படி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிஎஸ்பி ஒருவர் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : inspection ,house ,inspector assistant ,Inspector ,home , CPCIT DSP home, several lakhs, cannabis oil, drugs, seizure, inspector assistant, check
× RELATED ஈரோடு அருகே சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்