×

வயல்வெளியில் தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்து வாலிபர் பலி: நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டம்; பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வயல்வெளியில் தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக பலியானார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்ககோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே ஆயலச்சேரி ஊராட்சி சிங்கிலிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவர் நேற்று காலை வயல்வெளியில் நடந்து சென்றார். அப்போது, வயலில் உள்ள உயர் மின் அழுத்த மின்சார கம்பியை தாங்கியுள்ள கொம்பை பிடித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கொம்பு நழுவி கீழே விழுந்து, மின்சார கம்பி அஜித்குமார் மீது விழுந்தது. இதில், அவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த, அஜித்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்தின் உடலை வயல்வெளியில் வைத்து, நில உரிமையாளர் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், விவசாய நிலத்தில் மின்கம்பம் அமைக்க வலியுறுத்தியும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்தின் உறவினர்களிடம் சமரச பேச்சிவார்த்தை நடத்தி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன அஜித்திற்கு பவித்ரா (20) என்ற மனைவியும், கிஷோர் (1) என்ற மகனும் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் பொதுக்கழிப்பறை இல்லை. இதனால், நாங்கள் காலைக்கடன் கழிக்க வேண்டுமானால் வயல்வெளி பகுதிக்குதான் செல்ல வேண்டும். ஆகையால், பொதுக்கழிப்பறை கட்ட வேண்டும். மேலும், வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை தாங்குவதற்கு மின்கம்பங்கள் அமைக்கவில்லை. அந்த மின்சார கம்பிகளை கொம்புகள் வைத்து தூக்கி நிறுத்தியுள்ளனர். உடனே, மின்கம்பங்களை வயல்களில் நடவேண்டும், வயல்களில் மின்கம்பங்கள் இல்லாததால்தான் அஜித் உயிரிழந்தார் என்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Periyapalayam ,Relatives ,field , Field, power line, falling, youth killed, asking for relief, relatives struggle
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...