×

போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால் மார்க்கெட் கமிட்டியில் தேங்கியுள்ள 10 ஆயிரம் நெல் மூட்டைகள்

போளூர் : போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால் மார்க்கெட் கமிட்டியில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் நெல் சாகுபடியில் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. முன்பெல்லாம் கரும்பு நெல் வாழை என பல்வேறு சாகுபடிகள் இடத்திற்கு தகுந்தவாறு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இப்போது கரும்பு சாகுபடி பெருமளவு குறைந்து விட்டதால் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு மாவட்டத்தில் வடமேற்கு பருவமழை குறைந்து தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளில் போதிய அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

முன்பெல்லாம் சம்பா பருவம், நவரை பருவம், சொர்ணவாரி பருவம் என மூன்று பருவங்கள் மட்டுமே சாகுபடி நடக்கும். ஆனால் மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் பருவம் பார்க்காமல் தொடர்ந்து சாகுபடி நடக்கிறது. இதனால் 3 மாதத்தில் அறுவடை செய்யலாம் என்பதால் போளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல்சாகுபடி பரப்பளவு அதிகரித்து ெகாண்டே செல்கிறது. தற்போது சொர்ணவாரி, மற்றும் நவரை பருவம் அறுவடை வேகமாக நடந்து வருகிறது.

ஒரே சமயத்தில் இயந்திரங்களில் அறுவடை நடப்பதால் தினமும் 5 ஆயிரம் மூட்டைக்கு மேல் வந்து கொண்டு இருக்கிறது. இப்போதைய நிலையில் கடும் கோடை வெயில் காரணமாக தொழிலாளர்களால் முழுவீச்சில் எடை போட முடியவில்லை. இங்கு விவசாயிகளால் கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். விவசாயிகளுக்கு பணமும் உடனடியாக கிடைக்கிறது. இதனால் போளூர் நெல் கமிட்டிக்கு நெல் மூட்டைகளை எடுத்துவர விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது: ‘ஏற்கனவே குடோன்களில் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது. உள்ளே இடம் இல்லாததால் ெவட்ட வெளியில் 10 ஆயிரம் மூட்டைகள் தேங்கி உள்ளது. இதனை எடை போட்டு முடிக்க எங்களுக்கு சில நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் தான் 2 நாளைக்கு யாரும் நெல் மூட்டைகள் கொண்டு வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஆனாலும் விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் மேலும் மூட்டைகளை எடுத்து வருவதால் வெட்ட வெளியில் உள்ள 10 ஆயிரம் மூட்டைகள் உள்ளன. இவ்வளவு பெரிய கமிட்டியில் இன்னமும் பழைய முறைப்படி எடை கற்களை வைத்து எடை போடுவது வருத்தமாக உள்ளது. எனவே சிறிய அளவிலான நவீன எடை மேடைகளை அமைத்து உடனுக்குடன் எடைபோட உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூர் மார்க்கெட் கமிட்டியில் கட்டிடம் வசதி குறைவாக உள்ளதால் கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று புதிய கூடுதல் கட்டிடம் கட்டித்தர ₹1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் 15 கிலோ மீட்டர் தூரம் வரை நெல் மூட்டைகளை விவசாயிகள் எடுத்து வருவதால் வந்து செல்ல மிகவும் கடினமாக இருப்பதால் விவசாயிகளின் நலன் கருதி போளூர் அடுத்த கேளுர் கிராமத்தில் இடம் பார்க்கப்பட்டது.

அங்கு இடவசதி குறைவாக இருப்பதால் பக்கத்தில் உள்ள பால்வார்த்துவென்றான் கிராமத்தில் இடம் தேர்வு செய்து ₹1 கோடியில் துணை கமிட்டி கட்டிடம் கட்டப்பட்டது. இதை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஆனால் இதுகுறித்த எந்த தகவலும் எந்த விவசாயிகளுக்கும் தெரியவில்லை. இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டால் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு வரை தினமும் 1000 மூட்டைகள் எடை போட முடியும்.

போளூர் மார்க்கெட் கமிட்டியில் நெல் தேக்கம் அடைவதும் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதே நேரத்தில் பால்வார்த்துவென்றான் பகுதியில் கட்டப்பட்டு உள்ள கட்டிடத்திற்கு நெல் மூட்டைகள் எடுத்து செல்லும் பகுதி மிகவும் மேடான பகுதியாக உள்ளது. இதில் மாட்டு வண்டிகள் செல்லாது. லாரி மற்றும் டெம்போவில் தான் எடுத்து செல்ல முடியும். சாலை வசதி சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

துணை மார்க்கெட் கமிட்டிக்கு நெல் மூட்டைகளை கொண்டு வரலாம்

இது பற்றி போளூர் மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் தாமோதரனிடம் கேட்டபோது அவர் கூறியது, கேளூர் கிராமத்தில் கட்டப்பட வேண்டிய அந்தத் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம் அங்கு இடம் இல்லாததால் பால் வார்த்து வென்றான் கிராம எல்லையில் எட்டிவாடி ரயில்வே கேட்டுக்கு அருகே கட்டப்பட்டுள்ளது இங்கு கேளூர், சந்தவாசல், ஆத்துவாம்பாடி, விளாங்குப்பம், துரிஞ்சிகுப்பம், கட்டிப்பூண்டி, பொத்தரை, மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் போளூர் வராமல் துணை மார்க்கெட் கமிட்டியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் நெல் மூட்டை வரத்து குறைந்ததால் அதைப் பயன்பாடுக்கு கொண்டு வர முடியவில்லை. இப்போது போளூரில் 10 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு அதிகமாக தேக்கம் அடைந்துள்ளதால் கேளூர் சுற்றி உள்ள விவசாயிகள் துணை மார்க்கெட் கமிட்டிக்கு நெல் மூட்டைகளை கொண்டு வரலாம். அங்கேயே எடை போடலாம். இவை நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படப்பட்டது.

மேலும் போளூர் மார்ெகட் கமிட்டியில் உள்ள சிலரை அங்கு பணியில் போடப்பட்டுள்ளது. மேலும் மேடாக உள்ள பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில நாட்கள் கழித்து விவசாயிகள் நெல் மூட்டைகள் எடுத்து வர வசதியாக சிமென்ட சாலை போட்டு தரப்படும் என்றார்.

The post போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால் மார்க்கெட் கமிட்டியில் தேங்கியுள்ள 10 ஆயிரம் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Tags : Polur ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...