×

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஜெட் வேகம் தமிழகத்தில் ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா: சென்னையில் 1,216 பேருக்கு தொற்று; மற்ற மாவட்டங்களில் 3,015 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,216 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 3,015 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவும் வேகம் தீவிரமாகி உள்ளது. இதைத்தவிர்த்து வேலூர், கோவை மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,216 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 3,015 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழகத்தில் நேற்று 41,038 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4,321 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 4,086 பேர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 145 பேர். தமிழகத்தில் மாவட்ட வாரியாக சென்னையில் 1,216 பேர், திருவள்ளூரில் 364 பேர், விருதுநகரில் 289 பேர், மதுரை 262, கள்ளக்குறிச்சி 254, தூத்துக்குடி 196, செங்கல்பட்டு 169, நெல்லை 110, கோவை 98, கன்னியாகுமரி 93, திருச்சி 93, சேலம் 92, தேனி 90, வேலூர் 87, ராணிப்பேட்டை 79, திருவண்ணாமலை 70, காஞ்சிபுரம் 67, கடலூர் 67, சிவகங்கை 62, ராமநாதபுரம் 61, தர்மபுரி 56, புதுக்கோட்டை 46, திருவாரூர் 40, விழுப்புரம் 31, தஞ்சை 32, தென்காசி 29 மற்றும் நாகையில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,544 பேர் ஆண்கள். 1,687 பேர் பெண்கள். தற்போது வரை 77,386 ஆண்கள், 49,173 பேர் பெண்கள், 22 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 3,994 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 78,161 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 46,652 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேரும் அடங்குவர்.

இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 23 பேர். இதைத்தவிர்த்து மதுரையில் 9 பேர், செங்கல்பட்டில் 7 பேர், திருவள்ளூரில் 6 பேர், திருச்சியில் 6 பேர், ராமநாதபுரத்தில் 5 பேர், காஞ்சிபுரம், தஞ்சை, தி.மலையில் தலா 2 பேர், சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூரில் தலா ஒருவர் என்று மொத்தம் 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 7 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* 25 நாள் பெண் குழந்தை மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலையை சேர்ந்த பெண் குழந்தை பிறந்து 25 நாளில், அதாவது கடந்த 7ம் தேதி கொரோனா சிகிச்சை பலன் இன்றி இறந்தது.

* அதிகபட்ச சோதனை
தமிழகத்தில் நேற்று 42 ஆயிரத்து 369 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்றுதான் அதிகபட்ச சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சோதனை மையம் மற்றும் சேலத்தில் தனியார் சோதனை மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சோதனை மையங்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

Tags : districts ,Tamil Nadu , Chennai, Other District, Jet Speed, Tamil Nadu 4,231, Corona, Chennai 1,216
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...