×

மாணவன் கொலை வழக்கில் 5 பேர் கைது ஏரியாவில் கெத்து காட்டியதால் திட்டமிட்டு தீர்த்துக்கட்டினோம்: பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: வியாசர்பாடி சின்னதம்பி தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (22). அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து வந்தார்.  இவர் மீது, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இவரது தாய் விநாயகி மற்றும் பக்கத்து தெருவை சேர்ந்த அம்சா ஆகிய இருவரும் காசிமேட்டில் இருந்து மொத்தமாக மீன்களை வாங்கி, விற்பனை செய்து வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம் போல் மீன் வாங்க காசிமேடு புறப்பட்ட விநாயகி, பக்கத்து தெருவில் உள்ள அம்சாவை அழைத்து வரும்படி மகன் பிரசாந்த்தை பைக்கில் அனுப்பி வைத்தார்.

சுந்தரம் பவர் லேன் பிரதான சாலையில் சென்றபோது, பிரசாந்த்தை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார், படுகாயங்களுடன் கிடந்த பிரசாந்த்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவே அவர்  இறந்தார். போலீசார் விசாரணையில், வியாசர்பாடி சுந்தரம் பவர் லேன் பகுதியை சேர்ந்த பால சந்துரு (19), சூர்ய பிரகாஷ் (19), சுதாகர் (19), பரத் (21), சாக்ரடீஸ் (20) ஆகிய 5 பேர் முன்விரோத தகராறில் பிரசாந்த்தை கொன்றது தெரியவந்தது.

மாத்தூர் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் தனி குடிசை அமைத்து தங்கியிருந்த அவர்கள் 5 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:
பிரசாந்த் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதால், அந்த பகுதியில் தன்னை பெரிய ரவுடி போல் காட்டிக்கொண்டு, அடிக்கடி பலரிடம் தகராறு செய்வது, இளைஞர்கள் கும்பலாக நின்று பேசினால் அவர்களை அழைத்து மிரட்டுவது, யாராவது எதிர்த்து பேசினால் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான். அதன்படி எங்களிடமும் தகராறு செய்ததால், பிரசாந்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, கடந்த ஒரு வாரமாக அவனை தீவிரமாக கண்காணித்தோம். அப்போது, தினமும் அதிகாலையில் அவன் பக்கத்து தெருவில் உள்ள அம்சாவை அழைத்து செல்ல பைக்கில் செல்வது தெரிந்தது. அதன்படி, நோட்டமிட்டு அவனை தீர்த்துக்கட்டினோம். இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Student, murder case, 5 arrests, sensational confession
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்