×

வனத்தில் இடம்பெயரும் யானைகள்: வனத்துறையினர் கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வனத்திலிருந்து எல்லைப்பகுதியில் உள்ள தோட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வரும் யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் கடந்த மாதம் ஒரு சில நாட்கள் மட்டும் கோடை மழை பெய்தது. அதன்பின் மழையின்றி கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால், அடர்ந்த வனத்திலிருந்து யானை, சிறுத்தை, மான், வரையாடு, புலி, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் உணவு தேடி இடம்பெயர்வது தொடர்கிறது. பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட போத்தமடை, சேத்துமடை, ஆழியார், சர்க்கார்பதி,  ஆயிரங்கால்குன்று, பச்ச தண்ணீர் பள்ளம் உள்ளிட்ட இடங்களில் யானை நடமாட்டம் கடந்த சில மாதமாக அதிகரித்தது. இதில் சேத்துமடை மற்றும் ஆழியார்  அருகே உள்ள தோட்டங்களுக்கு யானைகள் இடம்பெயர்ந்து வருவது இன்னும் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதங்களில்  மட்டும், 5 முறை தோட்டங்களில் புகுந்த வெவ்வேறு யானைகள் அங்குள்ள தென்னைகளை துவம்சம் செய்து நாசப்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு, யானையை விரட்ட சென்ற வனத்துறையினரை அந்த யானை விரட்டியதுடன், வாகனத்தையும் சேதப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் அடிக்கடி வனத்திலிருந்து யானைகள் உணவு தேடி தோட்டத்துக்கு வந்து செல்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் வன எல்லையில் உள்ள தோட்டத்தில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் தலா 6 பேர் கொண்ட இரு குழுவினர், வன எல்லைப்பகுதியில் இடம்பெயர்ந்து வரும் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் சேத்துமடை மற்றும் ஆழியார் அருகே உள்ள தோட்டங்களில் யானைகள் இடம்பெயர்வது குறித்து, பகல் மற்றும் இரவு என தொடாந்து கண்காணிப்பு பணி நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


Tags : Forest ,Forest Department , Migrating Elephants, Forest,Monitoring, Forest Department
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...