×

முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணயம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கட்டணம் எவ்வளவு என தமிழகஅரசு அறிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான தொகுப்பு கட்டணத்தை நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து பன்முக நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு  திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை  அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.அதன்படி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.இக்குழு தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒருசில நிபந்தனைகளுடன் கூடிய அறிக்கையை அளித்தது.

அதனை நன்கு பரிசீலித்த தமிழக அரசு, கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் அளித்தது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து சேவைகளுக்குமான தொகுப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு அனைத்து சேவைகளுக்குமான அதிகபட்ச தொகுப்புக் கட்டணமாக பொது வார்டில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு (கிரேடு ஏ1, ஏ2, ஏ3, ஏ4) ரூ.5000, அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் (கிரேடு ஏ1, ஏ2) ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை. கிரேடு ஏ3, ஏ4க்கு ரூ.9000 முதல் ரூ. 13,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
* நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு- 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்த புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன்பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Hospitals ,CM , Corona treatment,private hospitals, CM's insurance scheme
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...