×

புதுக்கோட்டை அடுத்த முள்ளூர் பகுதியில் 2 கோடி மதிப்பிலான மரங்கள் 16 லட்சத்துக்கு டெண்டர்

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மீது பகீர் புகார்
* கால்நடை துறையிடம் இருந்து வீட்டுவசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்திய பின்,நூற்றுக்கணக்கான மரங்கள் விதிமுறை மீறி வெட்டப்படுகின்றன

சென்னை:  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, சம்பந்தப்பட்ட நிலப்பரப்பில் வளர்ந்துள்ள 3,772 அரியவகை மரங்களை அப்புறப்படுத்த உள்ளாட்சி மற்றும் வனத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.  இன்றைய நிலையில் இங்குள்ள மரங்களின் மதிப்பு 2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், எவ்வித முறையான மதிப்பீடும் செய்யாமல் வெறும் 16 லட்சத்திற்கு டெண்டர் விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனருக்கு புகார்கள் அனுப்பட்டன. அதில், ‘மரங்களை வெட்ட குறைவான விலையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே போடப்பட்ட டெண்டரை ரத்து செய்து மரங்களுக்கான மதிப்பீட்டை இன்றைய சந்தை விலைக்கு மறுமதிப்பீடு செய்ய வேண்டும். வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பீட்டை மீட்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதன் ெதாடர்ச்சியாக ஏற்கனவே போடப்பட்ட ெடண்டர் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பூச்சி முருகன் சார்பில், மேலாண்மை இயக்குனருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், ‘நடப்பு ஆண்டு (2020-2021) பணிக்கு தற்போதைய சந்தை நிலவர அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யாமல் 2019-2020ம் ஆண்டு அடிப்படையில் வனத்துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மரம் வெட்டுவது ெதாடர்பாக எந்தவொரு வெளிப்படையான விளம்பரமும் வெளியிடப்படவில்லை. மரம் வெட்டும் பணிக்கான டெண்டர், சம்பந்தப்பட்ட மரம் வெட்டும் பணி செய்யும் ஒப்பந்ததாரர்களது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மரங்களுக்கு நிர்ணயம் செய்த தொகையினை வாரியத்தால் செலுத்தப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, நடப்பு சந்தை விலை கணக்கிடப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேற்படி மரம் வெட்டும் பணிக்கான டெண்டரை திருச்சி வீட்டுவசதிப் பிரிவு செயற்பொறியாளர் மனோகரன், விதிமுறைகளை மீறி வெளிப்படைத்தன்மையின்றி டெண்டர் விடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். மேற்கண்ட நிலத்தினை சமன் செய்யும் திட்டத்தில், செயற்பொறியாளர் மனோகரன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனோகரனின் முறைகேடு செயல்களுக்கு மதுரை சரக ேமற்பார்வை பொறியாளர் தியாகராஜனும் உடந்தையாக உள்ளார்.
செயற்பொறியாளர் மனோகரன் தரப்பில் அனுமதிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் தனி தணிக்கை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், மேற்கண்ட இரு அதிகாரிகளையும் முள்ளூர் திட்டப் பணிகளில் இருந்து அவர்களை விடுவித்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை துறையிடம் இருந்து வீட்டுவசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்திய பின், நூற்றுக் கணக்கான மரங்கள் விதிமுறைகளை மீறி வெட்டப்பட்டு வருகின்றன’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெண்டர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mullur ,area ,Pudukkottai , Pudukkottai, Mullur Area, Trees, Tender
× RELATED அந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்