×

புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண் கொலை; குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுக்கோட்டை அருகே உள்ள வெள்ளனூர், பூங்குடி, முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ஏற்கனவே போலீசார் தனிப்படை அமைத்து 5 இளைஞர்களை கைது செய்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இதே பூங்குடி கிராமத்தை சேர்ந்த செந்தில் குமரன், ஸ்ரீனிவாசன் ஆகிய 2 பேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது 5 பேர் கொண்ட கும்பல் நகைக்காக அவர்களை கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசார் விரைந்து செயல்பட்டு 6 பேரை கைது செய்திருந்தனர். அதன் பின்பு அந்த பகுதியில் வழிப்பறி சம்பவம் சற்று குறைந்திருந்தது. இதனிடையே, பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பெரியநாயகி என்ற 58 வயது பெண்மணி, நேற்று தனது வீட்டில் இருந்து 100 மீட்டர் பின்புறம் உள்ள தையில மர காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், இரும்பு ராடு மற்றும் அரிவாளை கொண்டு மூதாட்டியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவன் நகை காணாமல் போயிருந்தது. எனவே இந்த கொலை நகைக்காக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்மணி பெரியநாயகியை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும். இரவு நேர ரோந்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கூறி உயிரிழந்த பெரியநாயகியின் உறவினர்கள் புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் செய்ததால் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு வந்த புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி தலைமையிலான போலீசார், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய இருப்பதாகவும், சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும் என உறவினர்களிடம் கேட்டனர். அதன் பேரில் மறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

The post புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண் கொலை; குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Velanur ,Bungudi ,Mullur ,Dinakaran ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...